'டிட்வா' புயல்.. பொதுமக்கள் 2 நாட்களுக்கு வெளியேற வேண்டாம்.. பால், பிரட் வாங்கி வைத்து கொள்ளுங்கள்..!
வங்கக் கடலில் உருவாகி வடமேற்கு திசையில் நகரும் 'டிட்வா' புயல், புதுச்சேரி கடலோர பகுதியை ஒட்டி செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புயல் தாக்கத்தை கருத்தில் கொண்டு, அடுத்த இரண்டு நாட்களுக்கு மக்கள் அத்தியாவசியமின்றி வெளியே வர வேண்டாம் என்று புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்திய வானிலை ஆய்வு மையம் புதுச்சேரிக்கு 'ரெட் அலர்ட்' விடுத்துள்ளது. இதனால், 20 சென்டிமீட்டர் வரை கனமழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. கனமழையை எதிர்கொள்ள, அரக்கோணத்திலிருந்து 60 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் புதுச்சேரிக்கு வந்துள்ளனர்.
புயலால் பாதிக்கப்படக்கூடிய மக்களுக்காக 312 தற்காலிகத் தங்கும் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் உதவிகளுக்கு 112, 1070, 1077 என்ற கட்டுப்பாட்டு அறை எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.
மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் பால், பிரெட் போன்ற அத்தியாவசிய பொருட்களை வாங்கி வைத்துக்கொள்ளுமாறு ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.
Edited by Mahendran