நாகையில் புயல் அச்சம்: கரை திரும்பாத படகுகள்; மீனவர்கள் கவலை.. நிரந்தர தீர்வு கோரி மீனவர்கள்!
வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள 'டிட்வா' புயல் எச்சரிக்கையை தொடர்ந்து, நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு சென்ற பெரும்பாலான விசைப்படகுகள் பாதுகாப்பாக கரை திரும்பிவிட்டன.
இந்நிலையில், அக்கரைப்பேட்டை மீனவ கிராமத்தை சேர்ந்த எழிலரசன் என்பவருக்கு சொந்தமான இரண்டு படகுகளும், அதில் இருந்த சுமார் 20-க்கும் மேற்பட்ட மீனவர்களும் இதுவரை துறைமுகத்தை அடையவில்லை என மாவட்ட மீன்வளத்துறை தகவல் வெளியிட்டுள்ளது. இது, புயலின் தீவிரம் மற்றும் மீனவர்களின் பாதுகாப்பு குறித்து பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
புயல் காரணமாக நாகை மாவட்ட கடல் பகுதிகளில் கடும் சீற்றத்துடன் கூடிய அலைகள் காணப்படுகின்றன. இதற்கிடையே, ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் பத்திரமாக நிறுத்தப்பட்டிருந்த ஒரு விசைப்படகின் நங்கூரம் அறுந்து, பலத்த சூறைக்காற்று மற்றும் கடல் சீற்றத்தால் சேரன் கோட்டை பகுதியில் கரை ஒதுங்கிச் சேதமடைந்துள்ளது.
கரை ஒதுங்கிய படகை மீட்கும் பணியில் அப்பகுதி மீனவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். கடல் சீற்றம் அதிகரிக்கும் ஒவ்வொரு முறையும் படகுகள் சேதமடைவதால், தங்கள் உடைமைகளுக்கும், தொழிலுக்கும் நிரந்தர பாதுகாப்புத் தீர்வுகளை அரசு ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்று மீனவ சமூகத்தினர் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
Edited by Siva