ஆதார் அட்டையை பிறந்த சான்றிதழாக ஏற்க முடியாது: அரசின் அதிரடி அறிவிப்பு!
உத்தரப் பிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநில அரசுகள், இனிமேல் ஆதார் அட்டையை பிறந்த தேதி அல்லது பிறப்பு சான்றிதழாக ஏற்க முடியாது என்று திட்டவட்டமாக அறிவித்துள்ளன. போலியான ஆவண பயன்பாடுகளை தடுப்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
உ.பி.யில் உள்ள அனைத்து துறைகளுக்கும் விடுக்கப்பட்ட உத்தரவில், ஆதார் அட்டையுடன் பிறப்பு சான்றிதழ் இணைக்கப்படாததால், அதை பிறப்பு சான்றிதழாகவோ அல்லது பிறந்த தேதிக்கான ஆதாரமாகவோ கருத முடியாது என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவில், 2023-ஆம் ஆண்டின் பிறப்பு மற்றும் இறப்பு பதிவு சட்டத்திற்கு பிறகு, ஆதார் அட்டையை மட்டுமே ஆதாரமாக கொண்டு உருவாக்கப்பட்ட அனைத்து பிறப்புச் சான்றிதழ்களும் ரத்து செய்யப்படும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது. தாமதமாக பெறப்படும் சான்றிதழ்களுக்கு இனிமேல் ஆதார் அட்டை ஆதாரமாக ஏற்றுக்கொள்ளப்படாது.
சந்தேகத்திற்குரிய சான்றிதழ்களை ரத்து செய்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வருவாய் அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். நிலுவையில் உள்ள விண்ணப்பங்களில் முரண்பாடு கண்டறியப்பட்டால், கட்டாயம் போலீஸ் புகார் அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Edited by Siva