SIR படிவத்தை முழுமையாக நிரப்பாவிட்டால் நிராகரிக்கப்படுமா? தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் விளக்கம்..!
தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளுக்காக வழங்கப்பட்டுள்ள எஸ்ஐஆர் கணக்கெடுப்பு படிவத்தை முழுமையாக பூர்த்தி செய்வது கட்டாயமில்லை என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெளிவுபடுத்தியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், கணக்கெடுப்பு படிவத்தின் முதல் பகுதி மட்டுமே நிரப்பப்பட்டாலும் அது கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் என்றும், நிராகரிக்கப்படாது என்றும் உறுதி அளித்தார். இதனால், படிவத்தை நிரப்பி கொடுக்காத பொதுமக்களின் அச்சம் நீங்கியுள்ளது.
டிசம்பர் 4, 2025-க்கு முன்பு வாக்காளர் கையொப்பமிட்ட கணக்கீட்டு படிவத்தை வாக்குச்சாவடி நிலை அதிகாரியிடம் சமர்ப்பித்தால், அவரது பெயர் டிசம்பர் 9, 2025 அன்று வெளியிடப்படும் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெறும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.
உரிய காரணம் இல்லாமல் தகுதியான எவரது பெயரும் நீக்கப்படாது என்றும், இறந்தவர்கள், முகவரியில் இல்லாதவர்கள், இரட்டை வாக்குரிமை உள்ளவர்கள் போன்றோரின் பெயர்கள் மட்டுமே நீக்கப்படும் என்றும் அவர் விளக்கம் அளித்தார்.
Edited by Mahendran