மன்னிப்பு கோரினார் பிசிபி தலைவர் மொஹ்சின் நக்வி, ஆனால் கோப்பையை தர மறுப்பு!
கடந்த செப்டம்பர் 28 ஆம் தேதி நடைபெற்ற ஆசிய கோப்பை இறுதிபோட்டிக்கு பிறகு ஏற்பட்ட குழப்பமான சூழ்நிலைக்காக, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் மொஹ்சின் நக்வி, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திடம் மன்னிப்பு கோரியுள்ளார்.
இறுதிப் போட்டிக்கு பிறகு, மொஹ்சின் நக்வியிடம் இருந்து கோப்பையையும் பதக்கங்களையும் பெற இந்திய அணி மறுத்ததை தொடர்ந்து, அவர் கோப்பையையும் பதக்கங்களையும் எடுத்து கொண்டு வெளியேறினார்.
இந்த நிலையில் நேற்று நடந்த ACC கூட்டத்தில், நிலைமை இந்த அளவுக்கு மோசமடைந்திருக்கக் கூடாது என்று ஒப்புக்கொண்டு, பிசிசிஐ-யிடம் நக்வி வருத்தம் தெரிவித்தார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் கோப்பையை இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான வெற்றி பெற்ற இந்திய அணியிடம் கோப்பை முறையாக ஒப்படைக்கப்பட வேண்டும்," என்று வலியுறுத்தப்பட்டது. ஆனால் பிசிசிஐ-யிடம் மன்னிப்பு கோரிய போதிலும், மொஹ்சின் நக்வி இந்திய அணிக்கு கோப்பையைத் தர அவர் மறுத்துவிட்டார். இந்திய அணிக்கு கோப்பை வேண்டுமானால், கேப்டன் தனிப்பட்ட முறையில் துபாயில் உள்ள ACC அலுவலகத்துக்கு வந்து பெற்றுக் கொள்ள வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
இந்த கோரிக்கையை பிசிசிஐ நிராகரித்ததால் இனி அடுத்து என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
Edited by Siva