ஜனாதிபதிக்கு சுப்ரீம் கோர்ட் காலக்கெடு: 8 மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் கடிதம்
சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க ஜனாதிபதி மற்றும் ஆளுநர்களுக்கு காலக்கெடுவை சுப்ரீம் கோர்ட் நிர்ணயித்த நிலையில், காலக்கெடுவை நிர்ணயிக்க முடியுமா என ஜனாதிபதி திரௌபதி முர்மு கேள்வி எழுப்பினார்.
இந்த நிலையில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கர்நாடகம், கேரளம், தெலுங்கானா, மேற்குவங்கம், இமாச்சலப் பிரதேசம், பஞ்சாப், காஷ்மீர், ஜார்கண்ட் உள்ளிட்ட 8 மாநில முதல்வர்களுக்கு இது குறித்து கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:
மாநில சுயாட்சியை காக்க அனைத்து மாநிலங்களும் உறுதிபூண வேண்டும்.
இந்திய அரசியலமைப்பு சட்ட கட்டமைப்பை பாதுகாத்திட மாநில முதல்வர்கள் முன்வர வேண்டும்.
ஆளுநருக்கு எதிராக தமிழக அரசின் வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை கேள்விக்குள்ளாக்குவதே ஜனாதிபதி குறிப்பின் நோக்கம்.
ஆளுநருக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை சீர்குலைக்க வெளிப்படையாக பா.ஜ.க. முயற்சிக்கிறது.
நாட்டின் கூட்டாட்சி அமைப்பையும் மாநில சுயாட்சியையும் பாதுகாக்க மாநிலங்கள் முன்வர வேண்டும்.
ஜனாதிபதி அனுப்பிய குறிப்பை அனைத்து மாநில அரசுகளும் எதிர்க்க வேண்டும்.
மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதை தாமதிக்க ஆளுநர் வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்த முடியாது.
மாநில அரசுக்கு எதிராக பிடிவாதப் போக்கை ஆளுநர்கள் கடைபிடித்தால், இந்த தீர்ப்பு உதவியாக இருக்கும்.
இவ்வாறு அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
Edited by Siva