முருக பக்தர்கள் மாநாட்டில் பங்கேற்றோர் மீது வழக்கு பதிவு செய்வதாக தகவல் வெளியான நிலையில் இதுகுறித்து தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சி நடக்கிறதா, ரவுடி குழுக்களின் ஆட்சி நடக்கிறதா என்று சந்தேகப்படும் அளவுக்கு அட்டூழியங்களும், அராஜகங்களும் நாள்தோறும் அரங்கேறி வருகின்றன. “காவல்துறையினர் மனித மிருகங்களாக மாறி கோயில் காவலாளி அஜித்குமாரை அடித்தே கொன்று விட்டனர்” என்று ஆளும் திமுக எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் பகிரங்கமாக குற்றச்சாட்டும் அளவுக்கு தான் திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு நிலைமை இருக்கிறது.
இது தொடர்பாக இனிகோ இருதயராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில், “டிஜிபி சார், கைது செய்யப்பட்ட காவலர்கள் வழுக்கி விழுந்து கட்டுபோடப்படுவார்களா? அல்லது தப்பி ஓட முயற்சி என்று ஏதாவது நல்ல செய்தி வருமா?? என்று கேள்வி கேட்டு இருக்கிறார். முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இருக்கும் காவல்துறையை, அவரது கட்சி எம்எல்ஏ ஒருவரே, இப்படி காரி உமிழ்ந்திருக்கிறார். கடந்த நான்காண்டு கால திமுக அரசுக்கு, இனிகோ இருதயராஜ் அறிக்கை தான் சான்றிதழ்.
சிவகங்கை மாவட்டம், திருபுவனம் கோவில் காவலாளி அஜித்குமாரை, முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான காவல்துறை அடித்தே கொண்டிருக்கிறது. முதலில் இந்த சம்பவத்தை திமுக அரசு மறைக்க பார்த்தது. ஆனால் உயர் நீதிமன்றத்தின் சவுக்கடி கேள்விகளும், விமர்சனங்களும், அஜித்குமாரை காவல்துறையினர் அடிக்கும் வீடியோவும் வெளியாகி, திமுக அரசின் அராஜகங்களை அம்பலப்படுத்தி விட்டது.
இனி மறைக்கவே முடியாது என்ற நிலை வந்த பிறகு, அமைச்சர் பெரியகருப்பனை அனுப்பி, அஜித்குமார் குடும்பத்துடன் முதல்வர் ஸ்டாலின் தொலைபேசியில் பேசி ஒரு நாடகத்தை அரங்கேற்றியுள்ளனர். 25 லாக்கப் படுகொலை மரணங்களுக்கு பிறகு மன்னிப்பு என்ற நாடகமும் சிபிஐ விசாரணை என்ற தேர்தல் அரசியலும் அரங்கேறியிருக்கிறது.
இந்து மதத்தையும், இந்துக் கடவுள்களையும் எப்போதும் கொச்சையாக பேசி வரும் திமுக துணை பொதுசெயலாளர், முன்னாள் மத்திய அமைச்சர் ஆ ராசா, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கடும் வார்த்தைகளால் விமர்சித்துள்ளார். இதை கண்டித்து தமிழகம் முழுவதும் பல இடங்களில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. முருக பக்தர்கள் மாநாட்டில் பங்கேற்றோர் மீது வழக்குப் பதிவு செய்வது அராஜகத்தின் உச்சம். திமுக அரசின் அராஜகங்கள், அட்டூழியங்களை பார்க்கும்போது முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில் தமிழகத்தில் நவீன எமர்ஜென்சி அமலாகி விட்டதோ என்ற சந்தேகம் எழுகிறது
சென்னை சேப்பாக்கத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், பாஜக மாநில துணைத் தலைவரும், திமுக அரசின் தவறுகளை புள்ளிவிவரங்களுடன், மக்களுக்குப் புரியும் வகையில் அம்பலப்படுத்தி வருபவருமான தமிழக பாஜக துணைத் தலைவர் நாராயண திருப்பதி அவர்களை குண்டுகட்டாக தூக்கி, துன்புறுத்தி கைது செய்துள்ளனர்.
ஆ.ராசாவை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்ற பெண்களிடம் காவல்துறையினர் கடுமையாக நடந்து நடந்து கொண்டுள்ளனர். அடிப்படை மனித உரிமைகளை மீறி பெண்களுக்கு பல விதமான துன்புறுத்தல்களை கொடுத்துள்ளனர்.
அமித்ஷா தமிழகத்திற்கு இருமுறை வந்து, அதிமுக - பாஜக கூட்டணியை உறுதிப்படுத்திய பிறகு, முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினரின் தூக்கம் தொலைந்து விட்டது. வரும் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற முடியாது என்பதை உணர்ந்துவிட்ட திமுகவினர், அராஜகங்கள், அட்டூழியங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
மக்கள் விரோத திமுக ஆட்சியின் உச்சமாக ஜூன் 22 ஆம் தேதி மதுரையில் நடந்த முருக பக்தர்கள் மாநாட்டில் பங்கேற்ற தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர் அண்ணாமலை, இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியன், உள்ளிட்ட பாஜக, இந்து முன்னணி நிர்வாகிகள் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதையெல்லாம் பார்க்கும் போது தமிழகத்தில் எமர்ஜென்சி அமலாகிவிட்டதோ என்ற சந்தேகம் எழுகிறது.
மதுரையில் நடந்த முருக பக்தர்கள் மாநாடு, இதுவரை தமிழகத்தில் நடக்காத அளவுக்கு மிகவும் அமைதியாக, நேர்த்தியாக, கட்டுக்கோப்புடன் நடந்ததை அனைவரும் அறிவர். பாஜகவை எப்போதும் திட்டி தீர்க்கும் ஊடகங்கள் கூட, முருக பக்தர்கள் மாநாட்டில் லட்சக்கணக்கானோர் நடந்து கொண்ட விதத்தை பாராட்டி உள்ளனர்.
மாநாட்டில் 5 லட்சத்திற்கும் அதிகமானோர் திரண்ட போதும், டாஸ்மாக் மதுக்கடைகளில் மது விற்பனை உயரவில்லை. போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மக்கள் அவதிப்படவில்லை. மதுரை மாநகரை சுற்றியுள்ள கடைகளில் யாரும் தகராறு செய்யவில்லை. மாநாடு முடிந்ததும், மாநாட்டு திடலில் போடப்பட்டிருந்த நாற்காலிகளை, மாநாட்டில் பங்கேற்றவர்களே எடுத்து அடுக்கி வைத்தனர். அந்த இடத்தை தூய்மைப்படுத்தினர். இந்த காட்சிகள் எல்லாம் ஊடகங்களில் வெளியாகி உள்ளது.
முருக பக்தர்கள் மாநாட்டினால் யாருக்கும் எந்த தொந்தரவும் இல்லை. ஆனாலும் திமுக அரசின் காவல்துறை 10 நாட்கள் ஆழ்ந்த உறக்கத்திற்கு பிறகு, தேர்தல் அரசியலுக்காக யாருடைய தூண்டுதலின் பெயரிலோ பாஜக இந்து முன்னணி தலைவர்கள் மீது பொய் வழக்கு பதிவு செய்துள்ளது. இது கடும் கண்டனத்திற்குரியது. திமுக அரசின் அராஜகங்களையும், அட்டூழியங்களையும் சில ஊடகங்களில் வேண்டுமானால் வராமல் பார்த்துக் கொள்ளலாம்.
ஆனால், இது சமூக ஊடகங்கள் காலம். நடப்பது அனைத்தையும் காட்சிகளாக, மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். திமுக அரசின் அராஜகங்களும், அட்டூழியங்களும் இந்து விரோத போக்கும், மக்களிடம் ஒவ்வொரு நொடியும் சென்று சேர்ந்து கொண்டிருக்கிறது. எனவே திமுக அரசு தனது அராஜகங்களை கைவிட்டு, சட்டத்தின் ஆட்சியை உறுதி செய்ய வேண்டும். இல்லையெனில் அதற்கான தண்டனை நிச்சயம் விரைவில் கிடைக்கும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Edited by Mahendran