பிரதமர் மோடி பொதுக்கூட்ட இடத்தில் மின்சாரம் தாக்கி சிறுவன் பலி.. ஆந்திராவில் சோகம்..!
ஆந்திர பிரதேச மாநிலம் கர்நூல் மாவட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடியின் பொதுக்கூட்டத்திற்காக ஒதுக்கப்பட்டிருந்த வாகன நிறுத்துமிடத்தில் மின்சாரம் தாக்கி 15 வயதுச் சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நூல் டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு பாபு பிரசாத் அளித்த தகவலின்படி, முனகலப்பாடு கிராமத்தை சேர்ந்த அந்த சிறுவன் கொடி கம்பத்திற்காக இரும்பு பைப்பை தூக்கிச் சென்றபோது, அது எதிர்பாராதவிதமாக உயர்மின் அழுத்தக் கம்பியில் பட்டு, சம்பவ இடத்திலேயே மின்சாரம் தாக்கி உயிரிழந்தான். இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
பிரதமர் மோடி கர்நூலில் இருந்தபோது, ஆந்திர பிரதேசம் முழுவதும் ரூ. 13,430 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்தார் மற்றும் அடிக்கல் நாட்டினார். இதில், ரூ. 2,880 கோடி மதிப்பிலான மின்சாரப் பரிமாற்றத் திட்டங்கள், ராயலசீமாவில் ஒரு லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் ஒர்வாகல் மற்றும் கொப்பர்த்தி தொழில்துறை மையங்கள் (ரூ. 4,920 கோடி முதலீடு) மற்றும் பல்வேறு சாலை, ரயில்வே திட்டங்கள் அடங்கும். பொதுக்கூட்டத்திற்கு முன், பிரதமர் மோடி ஸ்ரீசைலம் கோயிலில் வழிபாடு நடத்தினார்.
Edited by Siva