4 கிலோ தங்கம், 7 கிலோ வெள்ளி, ரூ.1 கோடிக்கும் மேல் ரொக்கம்.. ஓய்வு பெற்ற அதிகாரி வீட்டில் சோதனை.!
மத்தியப் பிரதேசத்தின் ஓய்வுபெற்ற கலால் துறை அதிகாரி தர்மேந்திர சிங் பதோரியாவின் வீடுகளில் லோக் ஆயுக்தா காவல்துறை அதிரடி சோதனை நடத்தியது. 38 ஆண்டுகால சேவையில் அவர் ஈட்டிய ரூ. 2 கோடி வருமானத்தைவிட பல மடங்கு அதிகமாக, அதாவது ரூ. 18.59 கோடி மதிப்புள்ள சொத்துகள் வைத்திருந்தது இந்த சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டன.
சட்டத்துக்கு புறம்பாக சொத்து குவித்ததாக வந்த புகாரின் பேரில், இந்தூர் மற்றும் குவாலியர் உட்பட எட்டு இடங்களில் ஒரே நேரத்தில் சோதனை நடத்தப்பட்டது. இதில், ரூ. 1.13 கோடி ரொக்கம், 4.22 கிலோ தங்கம், 7.13 கிலோ வெள்ளி, 5,000 யூரோக்கள் மற்றும் பல ஆடம்பர கார்கள், கடிகாரங்கள் கைப்பற்றப்பட்டன.
பதோரியாவுக்குச் சொந்தமான பூர்வீக வீடு, நான்கு அடுக்குமாடிக் குடியிருப்புகள் மற்றும் 4,700 சதுர அடியில் கட்டப்பட்டு வரும் மூன்று மாடிக் குடியிருப்பு உள்ளிட்ட அசையும் மற்றும் அசையாச் சொத்துகளின் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
பதோரியாவின் மகன் மற்றும் மகள் திரையுலகில் முதலீடு செய்துள்ளதால், இந்த முதலீடுகள் கணக்கில் காட்டப்படாத பணத்தைச் சட்டப்பூர்வமாக்கப் பயன்படுத்தப்பட்டதா என்றும் விசாரணை நடைபெறுகிறது. பதோரியா மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
Edited by Siva