வியாசர்பாடியில் தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவச் சென்ற தவெக கட்சியினர் தாக்கப்பட்டதாக வெளியான செய்தி குறித்து சென்னை காவல் ஆணையர் அலுவலகம் விளக்கம் அளித்துள்ளது.
சென்னை வியாசர்பாடியில் ஏற்பட்ட தீ விபத்தில் குடிசைகள் எரிந்த நிலையில் பலர் வீடுகளை இழந்தனர். இந்த விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக தமிழக வெற்றிக் கழகத்தை சேர்ந்த பெண்கள், நிர்வாகிகள் வியாசர்பாடி சென்றபோது அங்கு காவலர்களால் தாக்கப்பட்டதாக வெளியான செய்தி பரபரப்பை ஏற்படுத்தியது. காவல்துறையின் இந்த செயலை கண்டித்து தவெக தலைவர் விஜய் கண்டன அறிக்கை வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள சென்னை காவல் ஆணையர் அலுவலகம் “வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகரில் உள்ள குடிசைப்பகுதியில் ஏற்பட்ட தீ விபத்திற்கு பின்னர் குறிப்பிட்ட சில அமைப்பின் நிர்வாகிகள் காவல்துறையினரால் தாக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருவதன் தொடர்ச்சியாக, பாதிக்கப்பட்டதாக கூறப்படும் நபர்கள் அளித்த புகார்களின் பேரில் சென்னை வடக்கு மண்டல இணை ஆணையர் அளித்த அறிக்கையில், செய்திகளில் வெளியானது போல காவல்துறையினரால் மேற்படி அமைப்பின் நிர்வாகிகள் தாக்கப்பட்டதாக தெரியவரவில்லை.
மேலும், இதுகுறித்த விசாரணையில் ஒரு சிலர் அவர்கள் சார்ந்த கட்சியின் மேலிடத்தின் அங்கீகாரத்தை, கவனத்தை பெறுவதற்காக உண்மைக்கு புறம்பான கருத்துகளை பரப்பி வருவதாக தெரிகிறது. என்றாலும், சென்னை பெருநகர காவல் ஆணையர் இது தொடர்பாக விரிவான விசாரணை மேற்கொள்ள துணை ஆணையருக்கு உத்தரவிட்டுள்ளார்” என கூறப்பட்டுள்ளது.
Edit by Prasanth.K