கோவையில் பெட்டி பெட்டியாக பறிமுதல் செய்யப்பட்ட ஜெலட்டின் குச்சிகள்.. 2000 கிலோ என தகவல்..!
கோவையில் இருந்து கேரளாவுக்கு கடத்த முயன்ற 2,000 கிலோ ஜெலட்டின் வெடிபொருட்களுடன் ஒரு வேனை, தீவிரவாத தடுப்புப் பிரிவு காவல்துறையினர் இன்று அதிகாலை மடக்கி பிடித்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை வழியாக கேரளாவுக்கு வெடிபொருட்கள் கடத்தப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்ததை அடுத்து, காவல்துறையினர் உடனடியாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
இன்று அதிகாலை 4 மணியளவில் கேரளாவை நோக்கி சென்ற வேனை மதுக்கரை அருகே தீவிரவாத தடுப்புப் பிரிவு காவல்துறையினர் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது, வேனில் பெட்டி பெட்டியாக ஜெலட்டின் குச்சிகள் இருந்தது கண்டறியப்பட்டது. இவற்றின் மொத்த எடை சுமார் 2,000 கிலோ இருக்கும் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
உடனடியாக, வெடிபொருட்கள் இருந்த வேன் மற்றும் அதன் ஓட்டுநர் சுபேர் ஆகியோர் மதுக்கரை காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர். ஓட்டுநர் சுபேரிடம் தீவிரவாத தடுப்புப் பிரிவு மற்றும் மதுக்கரை காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
விசாரணையில், இந்த வெடிபொருட்கள் கேரளாவில் உள்ள ஒரு கல்குவாரிக்கு மலைகளை உடைப்பதற்காக கொண்டு செல்லப்பட்டதாக ஓட்டுநர் சுபேர் கூறியுள்ளார். ஆனால், வெடிபொருட்களை கொண்டு செல்ல உரிய அனுமதி மற்றும் ஆவணங்கள் உள்ளதா என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும், வேனின் உரிமையாளர் குறித்தும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம், மதுக்கரை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Edited by Mahendran