இப்படி செய்வது ரொம்ப தப்பு.. அமித்ஷாவுக்கு கடிதம் எழுதிய பினராயி விஜயன்..!
புதுடெல்லியில் மலையாள மாணவர்கள் இருவரை காவல்துறை அதிகாரிகள் தாக்கியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட கோரி, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், தனது கடிதத்தில் டெல்லி கல்லூரியில் பயிலும் மாணவர்களான ஐ.டி. அஸ்வந்த் மற்றும் கே. சுதின் ஆகியோரை செப்டம்பர் 24 அன்று காவல்துறை அதிகாரிகள், அவர்களை இந்தியில் பேசும்படி கட்டாயப்படுத்தி தாக்கியதாக தகவல் வெளியாகி உள்ளது.
உயர்கல்விக்காக நாடு முழுவதும் உள்ள மாணவர்கள் பல்வேறு மாநிலங்களுக்கு செல்வதை சுட்டிக்காட்டிய விஜயன், அவர்கள் எந்த மாநிலத்திற்கு சென்றாலும், அவர்களின் மொழி மற்றும் கலாச்சாரம் மதிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
சட்டத்தை காப்பாற்ற வேண்டிய அதிகாரிகளே இதுபோன்ற கடுமையான தவறான நடத்தையில் ஈடுபடுவது தண்டனைக்குரியது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். காவல்துறை என்பது மக்களை சமூக விரோதிகளிடமிருந்து பாதுகாப்பதே கடமை; அவர்களே இப்படி நடந்துகொண்டால், கல்வி மற்றும் பிழைப்புக்காக புலம்பெயரும் மக்களை துன்புறுத்த மற்றவர்களுக்கு அது மேலும் துணிச்சலைக் கொடுக்கும் என்றும் அவர் அச்சம் தெரிவித்தார்.
இந்த விவகாரத்தை அமித் ஷா மிகவும் தீவிரமாக கருத்தில் கொள்ள வேண்டும் என்றும், இந்த சம்பவம் குறித்து பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் பினராயி விஜயன் தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.
Edited by Siva