வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் நடத்த கூடாது: கேரள சட்டமன்றத்தில் தீர்மானம்!
கேரள சட்டமன்றத்தில், வாக்காளர் பட்டியலின் சிறப்புத் தீவிர திருத்தத்திற்கு எதிராக ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மதத்தின் அடிப்படையில் குடியுரிமை வழங்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை மீண்டும் கொண்டுவரும் முயற்சிகளுக்கு இந்த வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த செயல்முறை பயன்படுத்தப்படலாம் என தீர்மானம் கவலை தெரிவித்தது. அடிப்படை உரிமைகளை மீறும் இத்தகைய நடவடிக்கைகளை எதிர்த்து, இந்திய தேர்தல் ஆணையம் வெளிப்படையான வாக்காளர் பட்டியல் திருத்தத்தை நடத்த வேண்டும்" என்று இந்தத் தீர்மானம் வலியுறுத்தியது.
விரைவில் கேரளாவில் உள்ளாட்சித் தேர்தல்கள் மற்றும் அதை தொடர்ந்து சட்டமன்ற தேர்தல்கள் வரவுள்ள நிலையில், சிறப்பு திருத்த செயல்முறையை அவசரமாக மேற்கொள்வது மக்களின் விருப்பத்திற்கு எதிராக இருக்கலாம் என தீர்மானம் விமர்சித்தது. இந்த செயல்முறைக்கு நீண்டகாலத் தயாரிப்பு மற்றும் கலந்தாலோசனை தேவை என்றும் அது குறிப்பிட்டது.
பீகாரில் இந்த சிறப்புத் திருத்தச் செயல்முறை, வாக்காளர்களைப் பட்டியலில் இருந்து நீக்குவதற்கு வழிவகுத்தது என்றும், அது ஒருவிதமான விலக்கல் அரசியலுக்கு வழிவகுத்தது என்றும் தீர்மானம் சுட்டிக்காட்டியது. பீகார் சிறப்பு திருத்த செயல்முறையின் அரசியலமைப்புச் செல்லுபடித்தன்மை உச்ச நீதிமன்றத்தின் பரிசீலனையில் இருக்கும்போது, தேர்தல் வரவிருக்கும் கேரளா, தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களில் அவசரமாக இந்தச் செயல்முறை அறிமுகப்படுத்தப்படுவதை சாதாரணமாக பார்க்க முடியாது” என்று தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Edited by Siva