தேர்தலில் வெற்றி பெறுவதற்கான மந்திரத்தை அமித்ஷா எங்களுக்கு வழங்கினார்.. பாஜக நிர்வாகி
பீஹாரில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அம்மாநிலத்தில் தனது அரசியல் பயணத்தை இரண்டாவது நாளாக தொடர்ந்தார்.
பிஹாரில் உள்ள பெட்டியாவில் பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அமித் ஷா, நேற்று மாநிலத் தலைமை அலுவலகத்தில் பா.ஜ.க. நிர்வாகிகளுடன் கலந்துரையாடினார். இது குறித்து பேசிய மாநில பா.ஜ.க. தலைவர் திலீப் ஜெய்ஸ்வால், "வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தல்களில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெறுவதற்கான மந்திரத்தை அமித்ஷா எங்களுக்கு வழங்கினார். இந்த கூட்டத்தில் பத்து மாவட்டங்களை சேர்ந்த கட்சித் தொண்டர்கள் பங்கேற்றனர்," என்று தெரிவித்தார்.
இன்று, சமஸ்திபூர் மற்றும் அராரியா மாவட்டங்களில் உள்ள பா.ஜ.க. நிர்வாகிகளை அமித் ஷா சந்தித்து பேச திட்டமிட்டுள்ளார். கடந்த 15 நாட்களுக்குள் இது அவரது இரண்டாவது பிஹார் பயணம் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, செப்டம்பர் 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் ரோஹ்தாஸ் மற்றும் பெகுசராய் மாவட்டங்களில் நடைபெற்ற கட்சி மாநாடுகளில் அமித் ஷா உரையாற்றினார். அப்போது, "இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால், பிஹார் ஊடுருவல்காரர்களால் நிரம்பி வழியும். ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று காங்கிரஸின் 'வாக்கு திருட்டு' கதையைத் தொண்டர்கள் முறியடிக்க வேண்டும்" என்று அவர் கேட்டுக்கொண்டார்.
பா.ஜ.க.வின் இந்த தொடர் பிரச்சாரங்கள், பிஹாரில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை பா.ஜ.க. எந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதுகிறது என்பதைக் காட்டுகிறது.
Edited by Mahendran