இமாச்சல பிரதேச மாநிலத்தில் வரலாறு காணாத வெள்ளம் காரணமாக மக்கள் பெரும் தவிப்பில் இருக்கும் நிலையில், வெள்ள சேதத்தை நேரில் பார்வையிட்ட நடிகையும் பாரதிய ஜனதா எம்.பி.யுமான கங்கனா ரணாவத், மக்களுக்கு நிவாரணம் செய்வதற்கு தான் அமைச்சரும் இல்லை, தன்னிடம் நிவாரண நிதியும் இல்லை என்று புலம்பி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. என்னிடம் பேரிடர் நிவாரணத்திற்கான நிதி இல்லை, அல்லது நான் அமைச்சர் பதவியிலும் இல்லை. வெறும் நான் ஒரு எம்.பி. மட்டுமே. நாடாளுமன்றத்தில் பேசுவதற்கு மட்டுமே எங்களுக்கு உரிமை உள்ளது. எங்களின் பங்கு மிகவும் குறைவு. ஆனாலும், மத்திய அரசிடம் இருந்து பேரிடர் நிதியை பெற என்னால் உதவி செய்ய முடியும், என்று அவர் தெரிவித்தார். மேலும், மத்திய அரசு நிதி வந்தாலும் அது மாநில அரசுக்குத்தான் செல்லும் என்றும், மாநில அரசு அந்த நிதியை பாதிக்கப்பட்ட மக்களுக்கு சரியாகச் செய்யவில்லை என்றும் இமாச்சல பிரதேச காங்கிரஸ் அரசை அவர் கடுமையாகக் குற்றம் சாட்டினார். எங்களால் முடிந்த அளவு பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கியுள்ளோம். பிரதமர் வெளிநாட்டில் இருந்தாலும், இமாச்சல பிரதேச சேதம் குறித்து அவ்வப்போது தகவல்களைக் கேட்டு வருகிறார், என்றும் அவர் தெரிவித்தார். மத்திய அரசு உடனடியாக மீட்புப் படைகளை இமாச்சல பிரதேசத்திற்கு அனுப்பி நடவடிக்கை மேற்கொள்ள உதவி செய்ததாகவும், உள்ளூர் அளவில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கி இருப்பதாகவும் அவர் கூறினார். இமாச்சல பிரதேச காங்கிரஸ் கட்சி நிவாரண நடவடிக்கைகளை சரியாகச் செய்யவில்லை என்றும், மக்கள் கோபத்தில் இருக்கிறார்கள் என்றும், அடுத்த 20 ஆண்டுகளுக்கு இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வர முடியாது என்றும் அவர் ஆணித்தரமாக கூறினார். Edited by Siva