3.5 கிலோ தங்கம் அணிந்த கோல்ட் மேனுக்கு ரூ.5 கோடி மிரட்டல்.. மிரட்டியவர் இன்டர்போல் அமைப்பால் தேடப்படுபவரா?
ராஜஸ்தானின் சித்தோர்கரை சேர்ந்த பிரபல பழ வியாபாரி கன்ஹையா லால் கடிக் என்பவர் 3.5 கிலோ தங்கம் அணிவதால் கோல்ட் மேன் என்று அழைக்கப்படும் நிலையில் அவரிடம் ரூ.5 கோடி கேட்டு தாதா கும்பல் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்ஹையா லால் கடிக் பெற்ற ஒரு வாட்ஸ்அப் ஆடியோ பதிவில், ரூ.5 கோடி கொடுக்காவிட்டால் தங்கத்தை அணியும் நிலையில் இருக்க மாட்டீர்கள்" என்று அச்சுறுத்திய மர்ம நபர்கள், அமைதியாக பணத்தை அளிக்குமாறு வலியுறுத்தியுள்ளனர். இது குறித்து அவர் சிட்டி கோட்வாலி காவல் நிலையத்தில் கன்ஹையா புகார் அளித்துள்ளார்.
மிரட்டலுக்கு பின்னால் இருப்பதாக சொல்லப்படும் ரோஹித் கோதாரா என்ற தாதா, பிகானேரை சேர்ந்தவர். இவர் மீது 32-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. பிரபல ராப் பாடகர் சித்து மூஸ் வாலா கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கோதாரா, போலியான பாஸ்போர்ட் மூலம் துபாய்க்கு தப்பிச் சென்றார். இவர் தற்போது கனடாவில் இருப்பதாக நம்பப்படுகிறது. இவரைப் பிடிக்க இன்டர்போல் ரெட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.
Edited by Mahendran