இனிமேல் ரிட்டர்ன் கொடுத்து ஆப்பிள் நிறுவனத்தை ஏமாத்த முடியாது.. ஒவ்வொரு ஸ்டோரிலும் ஸ்கேனர் கருவி...
ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் ரீஃபண்ட் மற்றும் ரிட்டர்ன் மோசடிகளை தடுக்கும் வகையில் புதிய தொழில்நுட்பத்தை சோதித்து வருகிறது. ஆப்பிள் சில்லறை விற்பனை நிலையங்களில் புதிய ஸ்கேனர் கருவிகளை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக ப்ளூம்பெர்க்கின் மார்க் குர்மன் தெரிவித்துள்ளார்.
சமீபகாலமாக போலி வாடிக்கையாளர்கள் புதிய ஐபோனை வாங்கி, அதன் உதிரிபாகங்கள் அல்லது முழு போனையும் எடுத்துவிட்டு, பெட்டியை மீண்டும் அப்படியே சீல் செய்து ரிட்டர்ன் செய்து முழு பணத்தையும் திரும்ப பெற்று ஏமாற்றி வந்தனர். இதனை தடுக்க ஊழியர்கள் பெட்டியை பிரித்து பார்க்க அறிவுறுத்தப்பட்டனர். ஆனால், பெட்டியை பிரிப்பதால் பயன்படுத்தப்படாத புதிய ஐபோன்களையும் நிறுவனத்தால் மீண்டும் 'சீல் வைக்கப்பட்ட புதிய போனாக' விற்க முடியாமல் போனது.
இதற்கு தீர்வாகவே இந்த புதிய ஸ்கேனர் அறிமுகப்படுத்தப்படுகிறது. இந்த ஸ்கேனர் மூலம் ஐபோன் பெட்டியை திறக்காமலேயே, உள்ளே போன் மற்றும் அதன் உதிரிபாகங்கள் சரியாக இருக்கிறதா என்பதை ஆய்வு செய்ய முடியும். சோதனையில் போன் சரியாக இருந்தால், அந்த பெட்டியை பிரிக்காமலேயே மீண்டும் விற்பனைக்கு கொண்டு வர முடியும். இந்த புதிய ஸ்கேனர் கருவிகள் தற்போது ஆப்பிள் கடைகளுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன.

