விழுந்து வேகத்தில் எழுந்த இந்திய பங்குச்சந்தை.. சென்செக்ஸ் 1600 புள்ளிகள் ஏற்றம்..
இன்று உலகளாவிய சந்தைகளில் நிலையற்ற தன்மை நிலவியபோதிலும், இந்திய பங்குச்சந்தைகள் வலுவான ஏற்றத்துடன் தொடங்கின. மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் 1,656 புள்ளிகள் உயர்ந்து 84108 என்ற அளவிலும், தேசியப் பங்குச்சந்தையின் நிஃப்டி 482 புள்ளிகள் உயர்ந்து 25,831 என்ற அளவிலும் வர்த்தகத்தைத் தொடங்கின. மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் குறியீடுகளும் பச்சை நிறத்தில் வர்த்தகமாகின.
சென்செக்ஸ் பட்டியலில் இன்போசிஸ் 3.25 சதவீதம் உயர்ந்து முன்னிலை வகித்தது; இண்டிகோ, டிசிஎஸ், பஜாஜ் ஃபைனான்ஸ், ஐசிஐசிஐ வங்கி ஆகியவையும் ஏற்றம் கண்டன. மறுபுறம் பவர் கிரிட், எம்&எம், என்டிபிசி, டாடா ஸ்டீல், ஹிந்துஸ்தான் யுனிலீவர் ஆகியவை சரிவை சந்தித்தன.
கிஃப்ட் நிஃப்டி சாதகமான தொடக்கத்தை காட்டிய நிலையில், முந்தைய சரிவுக்கு பிறகு சந்தை மீண்டாலும், நிஃப்டி முக்கிய எதிர்ப்பு நிலைகளைத் தாண்டுவது மற்றும் வங்கிப் பங்குகளின் பங்களிப்பு ஆகியவை நீடித்த நிலைத்தன்மைக்கு அவசியம் என நிபுணர்கள் கருதுகின்றனர்.
அதேநேரம், அமெரிக்க தொழில்நுட்பப் பங்குகளின் வீழ்ச்சியால் செயற்கை நுண்ணறிவு சார்ந்த ஏற்றம் நீடிக்குமா என்ற கவலை எழுந்துள்ளதால், ஆசியச் சந்தைகள் சரிவைச் சந்தித்தன. ஜப்பானின் நிக்கி மற்றும் தென் கொரியாவின் கோஸ்பி ஆகியவை வீழ்ச்சியடைந்தன.

