எல் நினோவால் தமிழகத்தில் வறட்சி யா? ஏமாற்றிய வடகிழக்கு பருவமழை.. விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு...
வலுவான எல் நினோ நிகழ்வு காரணமாக, 2026-ஆம் ஆண்டின் வடகிழக்கு பருவமழை தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இயல்பை விட 20 முதல் 60 சதவீதம் வரை குறைவாக பதிவாகியுள்ளது. கடந்த இரண்டு வாரங்களாக குறிப்பிடத்தக்க மழை இல்லாததால், காவிரி டெல்டா மற்றும் தென் மாவட்டங்கள் உள்ளிட்ட பகுதிகளில் மண் ஈரப்பத பற்றாக்குறையும் பயிர் பாதிப்புகளும் ஏற்பட்டுள்ளன.
தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, மதுரை, தூத்துக்குடி, கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் நிலவும் சூழல் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
பசிபிக் பெருங்கடல் வெப்பநிலை உயர்வு மற்றும் வறட்சி அபாயத்தை எதிர்கொள்ள, வேளாண்மைத் துறை அலுவலர்கள் மற்றும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வல்லுநர்கள் அடங்கிய குழுக்கள் கள ஆய்வு மேற்கொண்டு வருகின்றன.
பயிர்களை காக்க சிக்கன நீர் மேலாண்மை, உயிர்க் காப்புப் பாசனம், 1% பொட்டாஷ் மற்றும் PPFM தெளிப்பு ஆகிய வறட்சித் தணிப்பு வழிமுறைகளைப் பின்பற்றுமாறு விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சில பகுதிகளில் இந்த வாரம் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. விவசாயிகளை பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

