வியாழன், 12 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 25 நவம்பர் 2024 (15:04 IST)

தமிழ்நாட்டில் வேர்க்கடலை பயிரிட குஜராத்தில் விதைகளை வாங்கும் விவசாயிகள் - என்ன காரணம்?

Peanuts

குஜராத்தில் உள்ள வேளாண் விளைபொருள் சந்தைக் குழுவின் (APMC) கிடங்கு, விவசாயிகள் விற்க கொண்டு வந்த நிலக்கடலையால் நிரம்பி வழிகிறது.

 

 

இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு வேர்க்கடலையின் சந்தை விலை, மவுண்ட் (Maund - தோராயமாக 20 கிலோ) ஒன்றுக்கு ரூ.70 குறைந்துள்ளது. ஆனால், குஜராத் ஜூனாகத் கிரவுண்ட்நட் 9 (ஜிஜேஜி-9) மற்றும் காதிரி-6 எனும் இரு வேர்க்கடலை ரகங்களுக்கு அதிக சந்தை விலை கிடைத்துள்ளது. இதற்கு காரணம், தமிழ்நாட்டு வியாபாரிகள் அதிகளவில் இந்த இரு ரகங்களையும் அதிக விலைக்கு வாங்குகின்றனர்.

 

எந்தெந்த மாவட்டங்களை சேர்ந்தவர்கள் வாங்குகின்றனர்?
 

வேர்க்கடலை பயிர் பெரும்பாலும் மூன்று முதல் நான்கு மாதங்களிலேயே அறுவடைக்குத் தயாராகிவிடும்.

 

“தமிழ்நாட்டில் உள்ள விவசாயிகள் மூன்று பருவங்களில் வேர்க்கடலைகளை பயிரிடுகின்றனர். ஒன்று காரி பருவம் (ஜூன்), காரி பருவத்திற்கு பிந்தைய பருவம் (செப்டம்பர் -அக்டோபர்) மூன்றாவது ராபி பருவம் (டிசம்பர்-ஜனவரி) ஆகிய பருவங்களில் பயிரிடுகின்றனர்” என, ஜூனாகத் வேளாண் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி இயக்குநர் பேராசிரியர் ராஜேஷ் மடாரியா கூறுகிறார்.

 

“தமிழ்நாட்டில் காரி பருவம் அதாவது பருவமழை காலத்தில் பயிரிடப்படும் வேர்க்கடலை அவ்வளவு நன்றாக இருக்காது. எனவே, அதிகளவிலான வேர்க்கடலை எண்ணெய் ஆலைகளுக்கு அனுப்பப்படும். அத்தகைய வேர்க்கடலைகள் விதைப்பதற்கு சிறந்தது அல்ல. காரி பருவத்திற்கு பிந்தைய பருவத்தில் பயிரிடப்படும் வேர்க்கடலை, டிசம்பர் - ஜனவரி மாதம் ராபி பருவத்தில் அறுவடை செய்யப்படும்."

 

"இதனால், தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு அச்சமயத்தில் பயிரிடுவதற்கு வேர்க்கடலை விதைகள் கிடைக்காது என்பதால் அவர்கள் குஜராத்தை சாந்திருக்கின்றனர்” என மடாரியா பிபிசி குஜராத்தியிடம் தெரிவித்தார்.

 

குஜராத் வேர்க்கடலை விதைகளுக்கு அதிக தேவை இருப்பதாக தமிழ்நாட்டிலிருந்து அவற்றை வாங்கச் சென்றிருந்த வியாபாரி சி.என். செந்தில் தெரிவித்தார்.

 

“தஞ்சாவூர், மதுரை, திருச்சி, சேலம் ஆகிய மாவட்டங்களில் வேர்க்கடலை விதைகளுக்கு அதிக தேவை இருக்கிறது. மகாராஷ்டிராவில் வேர்க்கடலை பயிரிடப்படுகிறது. ஆனால், இந்த இரண்டு ரகங்கள் அங்கு பயிரிடப்படுவதில்லை. அதனால், இத்தகைய விதைகளை நாங்கள் குஜராத் மாநிலத்தில் மட்டும் தான் வாங்க முடியும்,” என அவர் தெரிவித்தார்.

 

தமிழ்நாட்டில் அதிக கிராக்கி

 

ராபி பருவத்தில் வேர்க்கடலையை அறுவடை செய்வதற்கு தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு மிக குறுகிய காலமே இருக்கும்.

 

“தமிழகத்தில் கடற்கரைகள் இருப்பதால் குளிர்காலத்தில் வெப்பநிலை அதிகமாக குறையாது. எனவே, வேர்க்கடலையை குளிர்காலத்திலும் பயிரிட முடியும். ஆனால் அங்கு தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கிவிடுவதால் விவசாயிகளுக்கு (டிசம்பர் - ஜனவரி) அறுவடை செய்வதற்கு சுமார் 100 நாட்கள் மட்டுமே இருக்கும் (மூன்றரை மாதங்களுக்கும் குறைவாக)” என்கிறார் பேராசிரியர் மடாரியா.

 

“குஜராத்தில் உப்ஹாட் (Ubhad varieties) ரகங்கள் 90 நாட்களிலேயே அறுவடைக்குத் தயாராகிவிடும். ஜிஜேஜி-9 மற்றும் கே-6 ரகங்கள் இரண்டும் விரைவிலேயே அறுவடைக்குத் தயாராகும் உப்ஹாட் ரகங்கள். கே-6 ரகம் தடிமனான விதைப்பையை கொண்டிருப்பதால், பருவமழை தொடங்கினாலும் முளைக்காமல் விவசாயிகளுக்கு இழப்பு நேராமல் தடுக்கிறது. எனவே, தமிழ்நாட்டு வியாபாரிகள் இந்த இரு ரக வேர்க்கடலை விதைகளை வாங்குகின்றனர்.” என்று அவர் கூறுகிறார்.

 

ஜிஜேஜி-9 ரகம் ஜூனாகத் வேளாண் பல்கலைக்கழகத்தால் உருவாக்கப்பட்டது. கே-6 ரகம் ஆந்திர பிரதேசத்தின் என்.ஜி. ரங்கா வேளாண் பல்கலைக்கழகத்தின் வேளாண் ஆராய்ச்சி மையத்தால் உருவாக்கப்பட்டது.

 

கடந்த 20 ஆண்டுகளாக தமிழ்நாட்டிலிருந்து வியாபாரிகள் இந்த விதைகளை வாங்கிச் செல்வதாக புஜாரா கூறுகிறார்.

 

ஜூனாகத் வேளாண் பல்கலைக்கழகத்தின் எண்ணெய் வித்துகள் ஆராய்ச்சி மையத்திலும் முக்கிய பங்கு வகிக்கிறார் மடாரியா. மரபணு மற்றும் தாவர இனப்பெருக்க நிபுணராகவும் அவர் உள்ளார்.

 

“வேர்க்கடலை விதைகள் பொதுவாக பருவமழை முடிந்தவுடன் முளைக்காது. எனவே, ராபி பருவம் மற்றும் காரி பருவத்திற்கு பிந்தைய பருவத்திலும் வேர்க்கடலை நல்ல தரத்துடன் இருக்கும். அடுத்தாண்டு ராபி பருவம் வரை அவை பாதுகாக்கப்பட்டு, பின்னர் விதைகளாக பயன்படுத்த வேண்டியிருக்கும்.” என்கிறார் அவர்.

 

குஜராத் வேர்க்கடலையை விரும்பும் தமிழ்நாட்டு விவசாயிகள்

 

ஹபா கிராமத்திற்கு அருகே உள்ள ஜாம்நகர் ஏ.பி.எம்.சியில் வேர்க்கடலை வாங்கிய ஜடின் புஜாரா கூறுகையில், ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் வரை தமிழ்நாட்டை சேர்ந்த 30 வியாபாரிகள் ஹபா பகுதிக்கு வந்து வேர்க்கடலையை வாங்குகின்றனர் என்றார்.

 

“இந்தாண்டு தமிழ்நாட்டு விவசாயிகள் கட்ச் மற்றும் பாவ்நகர் ஆகிய பகுதிகளிலிருந்தும் வேர்க்கடலையை ஒரு கிலோவுக்கு ரூ.5-7 என குறைவான விலைக்கு வாங்கினர், ஆனால், ஹபாவில் தான் அதிகமாக வேர்க்கடலையை வாங்கினர்” என்றார்.

 

குஜராத் ஏ.பி.எம்.சியில் சரக்குகளை ஏலத்தில் வாங்குவதற்கு உரிமம் பெற வேண்டும். அந்த உரிமம் இல்லாததால் தமிழ்நாட்டு வியாபாரிகள் ஜடின் புஜாரா, பவீன் பபாரி போன்ற உள்ளூர் வியாபாரிகள் வாயிலாக வேர்க்கடலையை வாங்குகின்றனர்.

 

“ஜாம்நகரில் வேர்க்கடலை வாங்குவதையும் அவர்கள் விரும்புவதால், அதுவும் புகழ்பெற்ற மையமாக விளங்குகிறது. ” என்கிறார் பவீன் பபாரி.

 

“கோண்டால் மற்றும் ராஜ்கோட்டில் உள்ள ஏ.பி.எம்.சியிலும் சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டு விவசாயிகள் வேர்க்கடலையை வாங்கினர். ஆனால், இப்போது வியாபாரிகள் ஜாம்நகரில் 2017-18 முதல் வாங்கிச் செல்கிறார்கள்” என்று ஏ.பி.எம்.சி செயலாளர் ஹிதேஷ் படேல் கூறுகிறார்.

 

என்ன விலைக்கு வாங்குகின்றனர்?

 

ஜாம்நகர் ஏ.பி.எம்.சி செயலாளர் ஹிதேஷ் படேல் கூறுகையில், “ஜிஜேஜி-9 மற்றும் கே-6 ரக வேர்க்கடலைகள் அக்டோபர் 17 அன்று ஒரு மவுண்ட் ரூ.2,400-க்கு விற்பனையானது.” என்றார்.

 

“தீபாவளி பண்டிகைக்குப் பிறகு விலை சிறிது குறைந்தது. கடந்த வியாழக்கிழமை ஜிஜேஜி-9 ரகம் ரூ.1,600க்கு விற்பனையானது. கே-6 ரகம் ரூ.1,500க்கு விற்பனையானது,” என கூறுகிறார் படேல்.

 

கடந்தாண்டை விட இது ஒரு மவுண்ட்-க்கு ரூ.300 குறைவு என கூறுகிறார் புஜாரா.

 

“இந்தாண்டு வேர்க்கடலையின் தரம் அவ்வளவு சிறப்பாக இல்லை. இரண்டாவது மாதமாக தமிழ்நாட்டு விவசாயிகள் இங்கு வருகின்றனர், அதனால் விலை சிறிது குறைந்துள்ளது,” என்கிறார் புஜாரா.

 

ஆனால், குஜராத்தில் விற்பனையாகும் மற்ற வேர்க்கடலை ரகங்களுடன் ஒப்பிட்டால் இந்த விலை அதிகம் என கூறுகிறார் செயலாளர் படேல்.

 

அவரை பொறுத்தவரை, “மற்ற வேர்க்கடலை ரகங்கள் ஒரு மவுண்ட்-க்கு ரூ. 1,150-க்கு விற்பனையானது. இந்த ரகத்தை விட ஜிஜேஜி-9 மற்றும் கே6 ரகத்தை பயிரிட்ட விவசாயிகள் ரூ.400 அதிகமாக பெற்றனர்.” என்றார்.

 

கடந்தாண்டு தமிழ்நாட்டு வியாபாரிகள் 300 டிரக்குகளில் சுமார் 3 லட்சம் மவுண்ட் வேர்க்கடலையை ஹபா கிடங்கிலிருந்து வாங்கி சென்றதாகவும் படேல் தெரிவித்தார்.

 

படேலை பொறுத்தவரை, “ஜாம்நகர் தவிர்த்து ராஜ்கோட், மோர்பி, தேவ்பூமி, துவாரகா, அமரேலி, பாவ்நகர் ஆகிய மாவட்டங்களும் இந்த இரண்டு ரகங்களையும் விற்பனை செய்கின்றன. ஒவ்வோர் ஆண்டும் இங்கு விற்பனையாகும் வேர்க்கடலையின் அளவு அதிகமாகி வருகிறது” என்றார்.

 

குஜராத் விவசாயத்தில் இதன் தாக்கம் என்ன?

 

இந்தியாவில் அதிகமாக வேர்க்கடலையை விளைவிக்கும் மாநிலமாக குஜராத் உள்ளது. இந்தியாவில் விளைவிக்கப்படும் வேர்க்கடலையில் பாதிக்கும் மேல் குஜராத்தில் மட்டும் விளைவிக்கப்படுகிறது.

 

குஜராத் வேளாண் துறை இயக்குநர் அலுவலகம் வெளியிட்ட ஆரம்ப மதிப்பீட்டின்படி, 2024-25ஆம் ஆண்டில் 58.03 லட்சம் மெட்ரிக் டன் விளைவிக்கப்பட்டதாக தெரிவிக்கிறது. கடந்தாண்டை விட 13 மெட்ரிக் டன்கள் அதிகம். கடந்தாண்டு 45.10 லட்சம் மெட்ரிக் டன் வேர்க்கடலை விளைவிக்கப்பட்டது.

 

குஜராத்தில் ‘நம்பர் 20’ மற்றும் ‘நம்பர் 32’ போன்ற ரகங்களும் பிரபலமானவையாக உள்ளன, இவையும் அதிகளவு ஏக்கரில் விளைவிக்கப்படுகின்றது. வேளாண் இயக்குநர் அலுவலக தரவுகளின்படி, 2024-ம் ஆண்டின் காரி பருவத்தில் 19.08 லட்சம் ஹெக்டேரியில் வேர்க்கடலை பயிரிடப்பட்டது. 2023-ம் ஆண்டில் இது 16.35 லட்சம் ஹெக்டேராக இருந்தது.

 

ஜாம்நகர் மாவட்ட வேளாண் அலுவலர் ரிதேஷ் கோஹில் கூறுகையில், ஜாம்நகர் மாவட்டத்தில் ஜிஜேஜி-9 மற்றும் கே-6 ரக வேர்க்கடலை அதிகளவில் விளைவிக்கப்படுவதாக தெரிவித்தார்.

 

“உள்ளூர் மட்டத்தில் இந்த ரகங்கள் பயிரிடப்படுவது அதிகமாகியுள்ளது. இந்த தரவுகளை திரட்டுவதற்கு எந்த அமைப்பும் இல்லை. அதனால் எந்தளவுக்கு அதிகமாகியுள்ளது என்பதைக் கூறுவது கடினம். ஆனால், எங்கெல்லாம் அதிகரித்திருக்கிறது என்ற அவதானிப்புகள் உள்ளன,” என கோஹில் கூறினார்.

 

மேலும், “குறைவாக மழை பெய்தாலோ அல்லது பருவமழை காலத்தின் இறுதியில் மழை பெய்தாலோ, இந்த இரண்டு வகை நிலக்கடலை விளைச்சலும் குறைவாக இருக்கும். ஆனால், நீர்ப்பாசன வசதிகள் தற்போது அதிகரித்துள்ளன. தாங்களாகவே நீர்ப்பாசனம் செய்ய முடிவதால் ஜாம்நகர் விவசாயிகள் இந்த ரகங்களை பயிரிட்டு, அதிக விலைக்கு விற்கின்றனர்.” என்கிறார் கோஹில்.

 

இந்த ரகங்களுக்கு ஏற்ப ஜாம்நகர் மண்ணின் தன்மை இருப்பதாக பேராசிரியர் மடாரியா கூறுகிறார்.

 

“கால்சியம் அதிகமாக உள்ள மண்ணில் இந்த ரக வேர்க்கடலை நன்றாக வளரும். எனவே, ஜாம்நகர் பகுதியில் இவை நன்றாக வளருகின்றன. ஒரு கிராம் வேர்க்கடலை விதைகளிலிருந்து 140 கிராம் வேர்க்கடலைகள் பெறப்படுகின்றன. இதுதான் அந்த மண்ணின் சிறப்பான தன்மைக்கு உதாரணம்” என்றார் மடாரியா.

 

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.