திருமணமான 17 நாளில் புதுமாப்பிள்ளை மர்ம மரணம்.. ஐதராபாத் இளைஞருக்கு அமெரிக்காவில் நடந்தது என்ன?
அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் மாகாணம் லோவெல் நகரில் சிவில் இன்ஜினியராக வேலை செய்து வந்த ஹைதராபாத்தை சேர்ந்த முகமது ஜாபர் உசேன் என்பவர், தனது திருமணமான வெறும் 17 நாட்களில் மர்மமான முறையில் தனது வீட்டில் இறந்து கிடந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஆகஸ்ட் 28-ஆம் தேதி டெக்சாஸில் திருமணம் முடிந்து மாசசூசெட்ஸ் திரும்பிய அவர், கடந்த செப்டம்பர் 14-ஆம் தேதி தனது குடும்பத்தினரிடம் கடைசியாகப் பேசியுள்ளார். சில மணி நேரங்களுக்குப் பிறகு அவர் தூக்கத்திலேயே இறந்துவிட்டதாக அவரது ரூம்மேட் குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவித்துள்ளார்.
மிகவும் ஏழ்மையான பின்னணியைக் கொண்ட இவரது குடும்பத்தினர், உசேனின் உடலை ஹைதராபாத்திற்கு கொண்டு வர மத்திய அரசின் உதவியை நாடியுள்ளனர். இதற்காக மஜ்லிஸ் பச்சாவ் தஹ்ரீக் பேச்சாளர் அம்ஜத் உல்லா கான், வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு உசேனின் தந்தை எழுதிய கடிதத்தை எக்ஸ் தளத்தில் பதிவிட்டு, உடலை விரைவாக நாட்டிற்கு கொண்டு வர உதவ வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
உசேன் 2021-ஆம் ஆண்டு அமெரிக்கா சென்று மாஸ்டர் பட்டம் பெற்று, அங்கு பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றி வந்துள்ளார். மரணத்திற்கான உண்மையான காரணம் பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பின்னரே தெரியவரும்.
Edited by Siva
