ஆரம்பமே சிக்கலா?... சிம்பு 49 படத்தின் தயாரிப்பாளரை மாற்ற ஆலோசனையா?
சிம்பு நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் பத்து தல . அந்த படம் பெரிய வெற்றியைப் பெறவில்லை. அதன் பின்னர் அவர் கமல்ஹாசனோடு இணைந்து மணிரத்னம் இயக்கும் தக் லைஃப் படத்தில் நடித்து வருகிறார். அந்த படம் ஜூன் 5 ஆம் தேதி ரிலீஸாகிறது. இந்நிலையில் சமீபத்தில் சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடிக்கவுள்ள மூன்று படங்களின் அறிவிப்புகள் வெளியாகின. சிம்பு – ராம்குமார் பாலகிருஷ்னன் இயக்கத்தில் உருவாகும் அவரது 49 ஆவது படம் முதலில் தொடங்கவுள்ளது.
இந்தப் படம் ஜூன் மாதம் தொடங்கும் என சிம்பு தெரிவித்துள்ளார். கல்லூரியை மையமாக வைத்து உருவாகும் இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க கயாடு லோஹர் ஒப்பந்தம் ஆகியுள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது. சந்தானமும் இந்தப் படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ள நிலையில் சாய் அப்யங்கர் இசையமைக்கிறார். டாவ்ன் பிக்சர்ஸ் சார்பாக ஆகாஷ் பாஸ்கரன் தயாரிப்பதாக அறிவிக்கப்பட்டது.
ஆனால் சமீபத்த்தில் ஆகாஷ் பாஸ்கரனின் தயாரிப்பு நிறுவனங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியதை அடுத்து அந்நிறுவனம் தயாரிக்கும் படங்கள் முடங்கியுள்ளன. ஜூன் மாதத்தில் ஷூட் தொடங்குவதாக இருந்த சிம்பு 49 படமும் இதனால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அந்த படத்தை வேறு தயாரிப்பு நிறுவனத்துக்குக் கொண்டு செல்லும் ஆலோசனையில் சிம்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.