இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் தீப்தி சர்மாவுக்கு காவல்துறையில் உயர் பதவி.. அதிரடி அறிவிப்பு..!
உலகக் கோப்பையை வென்ற இந்திய மகளிர் கிரிக்கெட் அணியில் இடம்பெற்றிருந்த தீப்தி சர்மாவுக்கு காவல்துறை துணை கண்காணிப்பாளர் பதவி வழங்கப்படுவதாக உத்தர பிரதேச மாநில காவல்துறை தலைமை இயக்குநர் அறிவித்துள்ளார்.
மும்பையில் சமீபத்தில் நடைபெற்ற மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்று, தனது முதல் சாம்பியன் பட்டத்தை வென்றது.
இந்த போட்டியில் உத்தரப் பிரதேச மாநிலத்தை சேர்ந்த தீப்தி சர்மா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 212 ரன்கள் குவித்ததுடன், 22 விக்கெட்டுகளையும் கைப்பற்றி இந்தியா கோப்பையை வெல்ல முக்கிய காரணமாகத் திகழ்ந்தார்.
இறுதி ஆட்டத்தில் 58 ரன்கள் அடித்து, 5 விக்கெட்டுகளையும் வீழ்த்திய தீப்தி சர்மா, தொடர் நாயகி விருதையும் வென்றார்.
இதனை தொடர்ந்து, உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தின் "திறமைமிகு வீரர்" திட்டத்தின் கீழ், தீப்தி சர்மாவுக்குக் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் பதவியை அளித்து சிறப்பிக்கப்போவதாக அம்மாநில காவல்துறை தலைவர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
Edited by Siva