மீண்டும் தொகுதி மறுவரையறை மசோதா?.. திமுகவுக்கு தவெக பகிரங்க சவால்!
நாடாளுமன்றத்தில் தொகுதி மறுவரையறை தொடர்பான மசோதாவை மீண்டும் கொண்டுவர மத்திய பாஜக அரசு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படும் நிலையில், இந்த விவகாரத்தில் திமுக தலைமைக்கு தமிழக வெற்றிக் கழகம் பகிரங்க சவால் விடுத்துள்ளது.
மக்கள்தொகை அடிப்படையில் நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை மற்றும் எல்லைகளை மறுசீரமைப்பதே தொகுதி மறுவரையறையின் நோக்கமாகும். மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகளின் எண்ணிக்கை நிர்ணயிக்கப்பட்டால், மக்கள்தொகை வளர்ச்சியைக் கட்டுப்படுத்திய தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களின் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவ விகிதம் குறையக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது.
கடந்த ஏப்ரல் மாதம் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட இந்த மசோதா, தேவையான மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை கிடைக்காததால் தோல்வியடைந்தது. இந்நிலையில், நவம்பர் 30ஆம் தேதி தொடங்கும் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரில் திருத்தப்பட்ட மசோதாவை மீண்டும் தாக்கல் செய்ய மத்திய பாஜக அரசு திட்டமிட்டுள்ளது. புதிய மசோதாவின்படி அனைத்து மாநிலங்களிலும் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை 50 சதவீதம் அதிகரிக்கவும், 2029ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் 33 சதவீத மகளிர் இடஒதுக்கீட்டை அமல்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழகத்தின் தற்போதைய 7.18 சதவீத நாடாளுமன்றப் பிரதிநிதித்துவம் குறையக்கூடாது என்பதில் திமுக உறுதியாக உள்ளது. இந்தக் கோரிக்கை சட்டப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டால் மசோதாவை திமுக ஆதரிக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில்தான், நாடாளுமன்றத்தில் தொகுதி மறுவரையறை மசோதாவை எதிர்த்து வாக்களிப்போம் என பகிரங்கமாக அறிவிக்க திமுக தலைமை தயாரா? என தவெக சவால் விடுத்துள்ளது. மேலும் பிள்ளையைக் கிள்ளிவிட்டுத் தொட்டிலையும் ஆட்டும் சூழ்ச்சி அரசியலில் எங்களுக்கு ஒருபோதும் உடன்பாடில்லை எனவும் தவெக தெரிவித்துள்ளது.
இதையடுத்து, தொகுதி மறுவரையறை மசோதா விவகாரத்தில் திமுக என்ன முடிவெடுக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

