கரூரில் இன்று கடைகள் அடைக்கப்படும்: வணிகர் சங்கத்தலைவர் அறிவிப்பு..!
கரூரில் நேற்று தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பரப்புரை மேற்கொண்டபோது, கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 39 பேர் உயிரிழந்தனர். விஜய் பேசிவிட்டு சென்ற பிறகு, கூட்டம் கலைந்து செல்லும்போது இந்த நெரிசல் ஏற்பட்டது. இதில் 50-க்கும் மேற்பட்டோர் மயக்கமடைந்து, ஆம்புலன்ஸ் மூலம் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். பலர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சோகமான சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நள்ளிரவில் கரூர் சென்று பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.10 லட்சமும், தீவிர சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ரூ.1 லட்சமும் வழங்கப்படும் என்று அவர் அறிவித்தார்.
இந்த துயர சம்பவத்தால், கரூர் மாவட்டம் முழுவதும் சோகத்தில் மூழ்கியுள்ளது. இந்த நிலையில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, இன்று கரூரில் கடைகள் அடைக்கப்படும் என்று வணிகர் சங்கப் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா அறிவித்துள்ளார்.
Edited by Siva