கரூரில் நடந்த துயர சம்பவம் குறித்து காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் பல அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த விபத்து, ஏற்பாட்டாளர்களின் அலட்சியம் மற்றும் மக்களின் பொறுப்பற்ற தன்மை ஆகிய இரண்டும் சேர்ந்ததால் நிகழ்ந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.
1. கூட்டத்திற்கான தாமதம்:
தமிழக வெற்றிக் கழகம், பகல் 12:45 மணிக்கு விஜய் கரூர் கூட்டத்தில் பேசுவார் என்று அறிவித்திருந்தது. ஆனால், அவர் ஐந்து மணி நேரத்திற்கும் மேலாக தாமதமாக, மாலை 5 மணிக்கு பிறகுதான் விழா இடத்திற்கு வருகை தந்திருக்கிறார். இந்த தாமதம், காலையிலிருந்து கடுமையான வெயிலில் காத்திருந்த மக்களைச் சோர்வடைய செய்திருக்கிறது.
2. திடீர் நகர்வு:
பேருந்தின் முன் இருக்கையில் அமர்ந்திருந்த விஜய், திருக்காம்புலியூர் சந்திப்பை தாண்டியதும், திடீரென பேருந்தின் விளக்குகளை அணைத்துவிட்டு உள்ளே சென்றிருக்கிறார். இதனால், சாலையில் நீண்ட நேரமாகக் காத்திருந்த மக்கள், அவரை அங்கேயே பார்க்க முடியும் என்ற நம்பிக்கையை இழந்து, கூட்டம் நடக்கும் இடத்திற்கு சென்றால் பார்க்க முடியும் என நினைத்து, அனைவரும் ஒரே நேரத்தில் விழா மேடையை நோக்கி வந்துள்ளனர். இதுவே, நெரிசல் அதிகரிப்பதற்கான ஒரு முக்கிய காரணமாகக்கூறப்படுகிறது.
3. கூட்ட நெரிசலுக்கு காரணம்:
10,000 பேர் மட்டுமே வருவார்கள் என்று அனுமதி வாங்கப்பட்டிருந்த நிலையில், 25,000 முதல் 27,000 பேர் வரை திரண்டதால், கூட்டம் கட்டுக்கடங்காமல் போனது. அதிகப்படியான கூட்டம் காரணமாக, விழா மேடையை சுற்றியுள்ள பகுதிகள் முழுவதும் நெரிசல் ஏற்பட்டது.
4. அடிப்படை வசதிகள் இல்லை:
கட்சியின் சார்பில், கூட்டத்தை ஒழுங்குபடுத்த போதுமான தன்னார்வலர்கள் இல்லை என்று கூறப்படுகிறது. மிக முக்கியமான விஷயமான குடிநீர், முதலுதவி மருந்து மற்றும் மருத்துவ குழுவினர் என எந்த அடிப்படை வசதிகளும் அங்கே இல்லை. காலையிலிருந்து கடும் வெயிலில் காத்திருந்த மக்கள், கூட்டம் நெரிசலில் சிக்கியதால், உடனடியாக அவர்களுக்கு சிகிச்சை அளிக்க முடியாமல் போனது.
இந்த சம்பவம், ஒரு அரசியல் கூட்டத்திற்குச் செல்லும் முன், பொதுமக்கள் மற்றும் ஏற்பாட்டாளர்கள் இருவரும் பாதுகாப்பு மற்றும் ஒழுங்குமுறைகளை பின்பற்றுவதன் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது.
Edited by Siva