புயல் இன்னும் கரையை கடக்கவில்லை.. இன்று மாலை தான் கடக்கும்: தமிழ்நாடு வெதர்மேன்
வங்கக்கடலில் தோன்றிய ஃபென்ஜால் புயல் நேற்று இரவு கரையை கடந்து விட்டதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்த நிலையில், தனியார் வானிலை ஆய்வாளர் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான், புயல் இன்னும் கரையை கடக்கவில்லை என்றும், இன்று மதியம் அல்லது மாலை தான் கரையை கடக்கும் என்றும் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வங்கக் கடலில் தோன்றிய காற்றழுத்த தாழ்வு புயலாக மாறி, நேற்று இரவு கரையை கடந்தது என்றும் இதனால் சென்னை உள்பட பல பகுதிகளில் கன மழை பெய்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. புயல் கரையை கடந்தாலும், இன்னும் சென்னை உள்பட சில மாவட்டங்களில் மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் தமிழ்நாடு வெதர்மேன் தனது சமூக வலைத்தளத்தில் செயற்கைக்கோள் புகைப்படங்களின் அடிப்படையில் ஃபென்ஜால் புயல் இன்னும் கரையை கடக்கவில்லை என்றும், அது இன்னும் கடலில் தான் நிலை கொண்டிருப்பதாகவும், இன்று பிற்பகல் அல்லது மாலை தானே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றும் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக சென்னையில் இன்றும் திடீரென ஆங்காங்கே மழை பெய்யக்கூடும் என்று அவர் கூறியுள்ளார்.
ஒரு பக்கம் வானிலை ஆய்வு மையம் புயல் கரையை கடந்து விட்டது என்று கூறிவரும் நிலையில், தமிழ்நாடு வெதர்மேன், புயல் இன்னும் கரையை கடக்கவில்லை என்று கூறியிருப்பது, பொதுமக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
Edited by Siva