ஆபரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் முகாமில் இந்தியா தாக்குதல் நடத்தியதற்கு, பாகிஸ்தான் பதிலடி கொடுக்கும் என அந்நாட்டு பிரதமர் ஷபாஸ் ஷெரீப் ஆவேசமாக பேசியுள்ளார்.
போர் குறித்து இஸ்லமாபாத்தில் நாடாளுமன்றத்தில் இருந்து நாட்டு மக்களுக்கு அவர் தொலைக்காட்சியில் உரையாற்றியுள்ளார். அப்போது பேசிய அவர் “பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தி இந்தியா பெரிய தவறை செய்துவிட்டது. இந்த தாக்குதல் கோழைத்தனமானது. இதற்கு கண்டிப்பாக பதிலடி கொடுப்போம்.
பஹல்காமில் நடந்த தாக்குதலுக்கும் பாகிஸ்தானுக்கும் தொடர்பு இல்லை. ஆனால் இந்தியா தவறான காரணங்களுக்காக குற்றம் சாட்டியது. குற்றம் சாட்டுவதற்கு முன்பு விசாரணை நடத்த வேண்டும் என கூறியதையும் இந்தியா ஏற்க மறுத்தது.
பாகிஸ்தான் பின்வாங்கும் என அவர்கள் நினைத்திருக்கலாம். ஆனால் இங்கு பாதிக்கப்பட்டவர்களின் ஒவ்வொரு துளி ரத்தத்திற்கும் நாங்கள் பழிவாங்குவோம் என உறுதியளிக்கிறேன். இந்தியாவின் தாக்குதலுக்கு பாகிஸ்தான் தக்க பதிலடி கொடுத்தது. ஒரு மணி நேர வான்வழிப் போரில் எதிரிகளின் ஜெட் விமானங்களை தாக்கி அழித்தோம். உறுதியுடன் போராடி வரும் பாகிஸ்தான் ராணுவத்திற்கு, நம் மக்கள் ஒற்றுமையாக நிற்க வேண்டும்” என பேசியுள்ளார்.
Edit by Prasanth.K