1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வியாழன், 17 ஜூலை 2025 (11:44 IST)

40 இடங்களில் எலும்பு முறிவு.. திருடிய இளைஞரை அடித்தே கொன்ற கும்பல்..!

மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள இந்தூர் ஆசாத் நகர் பகுதியில், கட்டிட வேலை நடைபெறும் இடத்தில் இரும்பு கம்பிகளை திருடியதாகக் குற்றச்சாட்டி, 28 வயதான உபேந்திர சிங் தாக்கூர் என்ற இளைஞர் ஒரு கும்பலால் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
பாலம் கட்டுமான நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருந்த உபேந்திரா, அங்கிருந்து இரும்பு கம்பிகளை திருடியதாகக் குற்றம் சாட்டப்பட்ட நிலையில், அந்த கட்டிட தொழிலாளர்கள் ஒன்றாக சேர்ந்து அவரை சரமாரியாக அடித்தனர். இரும்பு கம்பிகள், உருட்டுக் கட்டைகள் ஆகியவற்றால் அடித்த நிலையில், அவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
 
அவருக்கு 40 இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டதாக கூறப்பட்ட நிலையில், அவர் உயிர் பிழைக்க வாய்ப்பே இல்லை என்றும் கூறப்பட்டது. இருப்பினும், அவரை காப்பாற்ற மருத்துவர்கள் போராடிய நிலையில், சில நிமிடங்களிலேயே அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கை, கால், விலா எலும்புகள் உட்பட பல இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டதாகவும், உள் இரத்தப்போக்கு ஆகியவை அவரது மரணத்திற்கு வழி வகுத்ததாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
 
"உபேந்திராவை அடித்தே கொலை செய்துவிட்டனர் என்றும், அவர் ஒருவர் தான் எங்கள் குடும்பத்தில் வருமானம் ஈட்டி கொண்டிருந்தவர் என்றும், இப்போது எங்கள் குடும்பம் நடுத்தெருவில் இருக்கிறது" என்றும் உபேந்திராவின் குடும்பத்தினர் கண்ணீர் மல்க கூறினர். அந்த இளைஞரை தாக்கியவர்கள் யார் யார் என்பது குறித்து காவல்துறை விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Siva