படுக்கை அறையில் இருந்து தப்பிக்க ரகசிய வழி.. ரூ.600 கோடி மோசடி செய்தவரை பொறி வைத்து பிடித்த போலீஸ்..!
ரியல் எஸ்டேட் வணிகம் செய்வதாக கூறி, பொதுமக்களிடமிருந்து 600 கோடி ரூபாய் மோசடி செய்த ரோகன் சல்டன்ஹா என்பவரை போலீசார் சுற்றி வளைத்துக் கைது செய்தனர். அவரது பங்களாவில் படுக்கை அறையில் இருந்து தப்பிக்க ரகசிய வழி இருந்ததையும் கண்டுபிடித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த மோசடி மன்னன், வணிகக் கடன்கள் மற்றும் லாபகரமான ரியல் எஸ்டேட் முதலீடுகளை கூறி பொதுமக்களிடம் இருந்து பணம் மோசடி செய்துள்ளார். செயலாக்க கட்டணம் மற்றும் சட்ட அனுமதி உள்ளிட்டவற்றுக்காக 50 லட்சம் முதல் 4 கோடி ரூபாய் வரை முன்பணம் செலுத்துமாறு கேட்டுக் கொண்டதாகவும், பணம் செலுத்தப்பட்டவுடன் அவர்களது தொடர்புகளை துண்டித்து மாயமாகி விடுவார் என்றும் கூறப்படுகிறது. இந்த நபரின் வங்கி கணக்குகளில் மூன்றே மாதங்களில் 40 கோடி ரூபாய்க்கு மேல் பரிவர்த்தனை பதிவாகியுள்ளது. இதன் மூலம் இந்த மோசடி வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இதனை அடுத்து, சல்டன்ஹாவின் மாளிகையை போலீசார் சுற்றி வளைத்தபோது, அந்த பங்களா ஒரு சாதாரண பங்களா போல் தெரிந்தாலும், படுக்கை அறையில் இருந்து தப்பிப்பதற்கு ரகசிய வழிகள் அமைக்கப்பட்டிருப்பதும், சுரங்கப்பாதைகள் மற்றும் பணத்தைக் கட்டு கட்டாக வைப்பதற்கான இடங்கள் இருப்பதும், தன்னுடைய படுக்கை அறையில் இருந்து பங்களாவை சுற்றி என்ன நடக்கிறது என்பதை கண்காணிக்கும் பல தகவல் தொடர்பு சாதனங்கள் இருந்ததும் கண்டறியப்பட்டுள்ளன.
இந்த நிலையில், ரோகன் சல்டன்ஹா கைது செய்யப்பட்டதை அடுத்து அவரிடம் விசாரணை நடந்து வருவதாகவும், இதுவரை 600 கோடி ரூபாய் வரை அவர் மோசடி செய்திருக்கலாம் என்றும், இந்த மோசடியை விசாரிக்க ஒரு விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்க முன்வர வேண்டும் என்றும், இந்த நபரால் பாதிக்கப்பட்டவர்கள் ஆயிரக்கணக்கில் இருப்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Edited by Mahendran