Delimitation மசோதாவுக்கு தேசியவாத காங்கிரஸ் ஆதரவு? திமுகவின் நிலை என்ன?
மக்களவைத் தொகுதிகள் மறுசீரமைப்பு தொடர்பான மசோதாவை நாடாளுமன்றத்தில் முதலில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும், அதன் விவரங்களை முழுமையாக படித்த பிறகே அரசியல் கட்சிகள் நிலைப்பாடு எடுக்க வேண்டும் என்றும் தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார் அணி) எம்.பி. சுப்ரியா சுலே தெரிவித்துள்ளார். இந்த மசோதா நல்ல சட்டமாகக்கூட அமையலாம் என்றும், கடந்த காலங்களில் தேசிய நலனுக்காக ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் இணைந்து செயல்பட்ட பல தருணங்கள் உள்ளன என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்துவது மற்றும் தொகுதி மறுசீரமைப்பு ஆகியவை தொடர்பாக ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும், எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணிக்கும் இடையே காரசாரமான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. மக்களவை இடங்களின் எண்ணிக்கையை 850 ஆக உயர்த்த வழிவகை செய்யும் இந்த மசோதாவிற்கு, முன்னதாக 131-வது அரசியலமைப்பு திருத்த மசோதா தேவையான பெரும்பான்மையைப் பெறத் தவறியதால் பின்னடைவு ஏற்பட்டது.
தொகுதி மறுசீரமைப்புடன் பெண்கள் இடஒதுக்கீட்டை இணைக்காமல், தற்போதைய 543 உறுப்பினர்களை கொண்ட மக்களவையிலேயே உடனடியாக அமல்படுத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்த சூழலில், முழுமையான மசோதா கைக்கு வந்த பிறகே விவாதிக்க முடியும் என்ற சுப்ரியா சுலேயின் கருத்து அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.

