1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 20 மே 2025 (10:07 IST)

பயங்கரவாதி ஹபீஸ் சயீத்தை ஒப்படைத்தால் மட்டுமே ஆபரேஷன் சிந்தூர் முடியும்: இந்திய தூதர்

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலாக இந்தியா மேற்கொண்ட 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டாலும், இதனால் இந்த ஆபரேஷன் முடிவுக்கு வந்துவிட்டது என்று கருத முடியாது என்று இஸ்ரேலுக்கான இந்திய தூதர் ஜெ.பி. சிங் தெரிவித்துள்ளார்.
 
இஸ்ரேலில் உள்ள பிரபல தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "பாகிஸ்தானில் தலைமறைவாக இருக்கும் ஹபீஸ் சயீத், சாஜித் மிர், லக்வி போன்ற பயங்கரவாதிகளை இந்தியாவிடம் ஒப்படைத்தால் மட்டுமே இது ஒரு முழுமையான முடிவாக பார்க்கப்படும்," என்று அவர் கூறினார்.
 
அதே நேரத்தில், மத அடிப்படையில் மக்கள் கொலை செய்யப்படும் நிகழ்வுகளை வேதனையுடன் பேசிய தூதர், "எந்த மதத்தை சேர்ந்தவர்கள் என்பதை அறிந்து கொல்லும் பயங்கரவாத மனோபாவம் விரைவில் அழிக்கப்பட வேண்டும். இதற்கான தொடக்கமே ஆபரேஷன் சிந்தூர்," என்றார்.
 
இந்த நடவடிக்கை முழுமையாக முடிவுக்கு வந்தது இல்லை என்றும், பாகிஸ்தான் மீது அவசியமான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
 
“தண்ணீர் பாயலாம், ஆனால் ரத்தம் பாயக்கூடாது. இதைத்தான் நம் பிரதமர் மோடி தெளிவாக கூறியுள்ளார்,” என அவர் குறிப்பிட்டார்.
 
அதேசமயம், அமெரிக்கா ராணாவை ஒப்படைக்க முடிந்தது போல, பாகிஸ்தானும் தன்னிடம் உள்ள பயங்கரவாதிகளை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
 
Edited by Mahendran