வாங்க நாம ரெண்டு பேரும் சேர்ந்து நிலவுக்கு போகலாம்.. இஸ்ரோவை அழைத்த நாசா...
இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவை நாசாவின் புகழ்பெற்ற நிலவு தளம் திட்டத்தில் இணையுமாறு அமெரிக்கா முறைப்படி அழைப்பு விடுத்துள்ளது.
நிலவில் அறிவியல் ஆராய்ச்சிகளை மேற்கொள்ளவும், எதிர்காலத்தில் செவ்வாய்க்கிரகத்திற்கு மனிதர்களை அனுப்பும் திட்டங்களுக்கு தயாராகவும் இந்த நிலவு தளம் உருவாக்கப்பட்டு வருகிறது. பெங்களூரில் நடைபெற்ற 9-வது குடிமை விண்வெளி கூட்டுப் பணிக்குழு கூட்டத்தின்போது இந்த முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இந்தியா மற்றும் அமெரிக்கா இடையேயான விண்வெளி ஒத்துழைப்பை மேலும் பலப்படுத்தும் வகையில் இந்த அழைப்பு வந்துள்ளதாக அமெரிக்கத் தூதர் செர்ஜியோ கோர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே சந்திரயான் திட்டங்கள் மூலம் நிலவு ஆராய்ச்சியில் முத்திரை பதித்துள்ள இஸ்ரோவின் பங்களிப்பு, இந்த நிலவு திட்டத்திற்கு மிகப்பெரிய பலமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நிலவில் மனிதகுலத்தின் முதல் நிலையமாக கருதப்படும் இந்த திட்டத்தில் இந்தியாவும் இணைவது உலக அரங்கில் இந்தியாவின் விண்வெளித் துறையின் அசுர வளர்ச்சியை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது.
Edited by Siva
