லஷ்கர் இ தொய்பாவின் தளபதிகளில் ஒருவர் சுட்டுக்கொலை: இந்திய ராணுவம் அதிரடி..!
ஜம்மு-காஷ்மீரின் பந்திபோரா மாவட்டத்தில் இன்று காலையில் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில், பயங்கரவாதி அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவின் முக்கிய தலைவர் அல்தாஃப் லல்லி சுட்டுக்கொல்லப்பட்டதாக பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளன.
பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு காஷ்மீர் முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரமாக்கப்பட்டுள்ளன. நேற்று முன் தினம் குல்காம் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருக்கு எதிராக நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடில் பதிலடி அளிக்கப்பட்டது. பாரமுல்லா மாவட்டத்தில் இரு பயங்கரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர்.
இந்த நிலையில் உதம்பூர் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கியுள்ளதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் நடத்தப்பட்ட சோதனையில், ராணுவத்தினரும் காஷ்மீர் போலீசாரும் இணைந்து செயல்பட்டனர்.
அதேபோல் பந்திபோரா மாவட்டத்தின் கோல்னார் பகுதியில் பயங்கரவாதிகள் மறைந்திருப்பது தெரிய வந்ததைத் தொடர்ந்து, இந்திய ராணுவம் மற்றும் காவல்துறையினர் இணைந்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதில் லஷ்கர்-இ-தொய்பாவின் முக்கிய தலைவர் அல்தாஃப் லல்லி உயிரிழந்தார், மேலும் இரு வீரர்கள் காயமடைந்தனர்.
இதே நேரத்தில், பஹல்காம் தாக்குதலில் தொடர்புடைய இரு பயங்கரவாதிகளின் வீடுகள் — ஹுசைன் ஆதில் தோகர் (அனந்த்நாக்) மற்றும் ஆசிப் ஷேக் (டிரால்) — வெடிகுண்டுகள் மற்றும் புல்டோசர் உதவியுடன் இடிக்கப்பட்டன.
Edited by Mahendran