அப்பாவிகளை அழித்தவர்கள் அழிந்துவிட்டார்கள்.. அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆவேசம்..!
பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீர் பகுதிகளில் அமைந்திருந்த 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா நடத்திய "ஆபரேஷன் சிந்தூர்" வெற்றிகரமாக முடிந்ததாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
இன்று அதிகாலை நடைபெற்ற இந்த தாக்குதலில், முப்படைகள் ஒருங்கிணைந்து தாக்குதல் நடத்தியது. இதில் பயங்கரவாத முகாம்கள் மட்டுமே குறிவைக்கப்பட்டன. பொதுமக்கள் எவரும் பாதிக்கப்படவில்லை என்றும் அவர் உறுதி செய்தார்.
இந்த தாக்குதல் பிரதமர் மோடியின் வலுவான முடிவால் சாத்தியமானதாகவும், “அப்பாவிகளை கொன்ற பயங்கரவாதிகள் அழிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு இந்திய ராணுவம் உரிய பதிலடி கொடுத்துள்ளது” என்றும் கூறினார்.
இந்தியாவின் உரிமையை நிலைநாட்டும் வகையில் இந்த தாக்குதல் செயல்பட்டது என்றும், வீரர்களின் தைரியத்துக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார்.
“ஆபரேஷன் சிந்தூர் திட்டமிட்ட முறையில், துல்லியத் தகவல்களின் அடிப்படையில் நடந்தது. பயிற்சி முகாம்கள் உட்பட முக்கிய இடங்கள் அழிக்கப்பட்டுள்ளன. இது இந்தியாவின் பாதுகாப்பு செயல்திறனை உலகிற்கு காட்டும் வகையில் அமைந்துள்ளது” என ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
Edited by Mahendran