ராணுவ நடவடிக்கைகளை நேரலை செய்ய வேண்டாம்.. ஊடகங்களுக்கு கோரிக்கை..!
இந்தியா - பாகிஸ்தான் இடையே நிலவும் நெருக்கடியான சூழ்நிலையில், பாதுகாப்பு அமைச்சகம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மத்திய பாதுகாப்பு அமைச்சகம் எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள பதிவில், ஊடகங்கள், ஆன்லைன் தளங்கள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு வீரர்களை நேரடி ஒளிபரப்புகளில் காண்பிப்பதை தவிர்க்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளது.
போர்வீரர்கள் செயல்படும் தருணங்களை நேரலையில் ஒளிபரப்புவது, அவர்களின் உயிருக்கு அபாயம் ஏற்படுத்தும் என்று அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக, ராணுவம் செயல்படும் இடங்கள், பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் அந்த நேரத்தில் இருக்கும் சூழ்நிலைகள் போன்றவை எதிரிகளால் தவறாக பயன்படுத்தப்பட வாய்ப்பு உள்ளது.
தேசிய பாதுகாப்பை முன்னிலைப்படுத்தி, ஊடகங்கள் செய்திகளை பதிக்கும்போது பொறுப்பு, உணர்வு மற்றும் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர். இதுபோன்ற சூழ்நிலைகளில் தரமான செய்திகளை பகிர்வதே தேச சேவையாகும் என்றும் கூறப்பட்டுள்ளது.
மும்பை தாக்குதல், கார்கில் போர் மற்றும் விமானக் கடத்தல் சம்பவங்களை எடுத்துக்காட்டிய பாதுகாப்பு அமைச்சகம், அந்நேரங்களில் நேரடி ஒளிபரப்புகள் சில தடங்கள் ஏற்படுத்தியதாகவும் குறிப்பிடுகிறது.
Edited by Mahendran