இந்திய வீரர்களைப் புலம்ப வைக்கவே அப்படி செய்தோம்… தென்னாப்பிரிக்கா பயிற்சியாளர் பதில்!
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கிடையே கௌகாத்தியில் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், 549 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடி வரும் இந்தியா, 22 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை இழந்து தோல்வியின் விளிம்புக்கு சென்று கொண்டிருப்பது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த போட்டியை இழந்தால் இந்திய அணி சொந்தமண்ணில் வொயிட்வாஷ் ஆன மோசமான சாதனையைப் படைக்கும்.
இந்த போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி முதல் இன்னிங்ஸில் 489 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 260 ரன்களும் எடுத்திருந்தபோது டிக்ளர் செய்தது. இந்தியா தனது முதல் இன்னிங்சில் 201 ரன்கள் எடுத்திருந்த நிலையில், 549 ரன்கள் என்ற இலக்கை நோக்கி தற்போது விளையாடி வருகிறது.
தென்னாப்பிரிக்கா அணி வலுவான நிலையில் இருந்தபோதும் நேற்று நீண்ட நேரம் ஆடி நாளின் முடிவிலேயே டிக்ளேர் அறிவித்தது. இது குறித்துப் பேசியுள்ள அவ்வணியின் பயிற்சியாளர் ஷூக்ரி கான்ராட் பேசியுள்ளார். அதில் “இந்திய வீரர்கள் நீண்ட நேரம் ஃபீல்டிங் செய்து அவர்களைப் புலம்ப வைக்க வேண்டும் என நினைத்தோம். அவர்களை வெற்றி வாய்ப்பில் இருந்து முழுமையாக வெளியேற்ற வேண்டும் என விரும்பினோம். மீதமிருக்கும் நேரத்த்தில் பேட் செய்து தப்பித்துக் கொள்ளுங்கள் எனற நிலைக்குத் தள்ளுவதே எங்கள் திட்டம். அதனால்தான் நாங்கள் நீண்ட நேரம் பேட் செய்து டிக்ளேரைத் தாமதமாக அறிவித்தோம். ஆனாலும் அவர்கள் போராட்டமே இல்லாமல் அவர்கள் விட்டுவிடுவார்கள் என்று நாங்கள் நினைக்கவில்லை.” எனக் கூறியுள்ளார்.