1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Modified: வியாழன், 8 மே 2025 (07:31 IST)

சில போட்டிகளுக்குப் பிறகா?... இதுதான் எங்கள் மூன்றாவது வெற்றி- தோனி ஜாலி பதில்!

நேற்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த போட்டியில் சி எஸ் கே மற்றும் கே கே ஆர் ஆகிய அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற தோனி முதலில் பந்து வீச முடிவெடுத்தார். அதன்படி பேட்டிங் ஆடிய கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 179 ரன்கள் சேர்த்தது.

அதன்பிறகு ஆடிய சி எஸ் கே அணி 6 ஓவர்களிலே 65 ரன்கள் சேர்த்தாலும் 5 விக்கெட்களை இழந்து தடுமாறியது. இதனால் வெற்றி பெறுவது கடினமான நிலையில் இளம் வீர்ர டிவால்ட் பிரவிஸ் அதிரடியாக ஆடி 25 பந்துகளில் 52 ரன்கள் சேர்த்து வெற்றியை எளிதாக்கினார். இதன் காரணமாக சென்னை அணி 20 ஆவது ஓவரில் 183 ரன்கள் சேர்த்து இலக்கை எட்டியது. தோனி இறுதிவரை களத்தில் நின்று அணியை வெற்றி பெறவைத்தார்.

இந்த சீசனில் 23 நாட்களுக்குப் பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது. இதுபற்றி போட்டி முடிந்ததும் வர்ணனையாளர் “சில போட்டிகளுக்குப் பிறகு வெற்றி பெற்றுள்ளீர்கள். இதை எப்படி உணர்கிறீர்கள்?” எனக் கேட்டார். அதற்கு தோனி சிரித்துக் கொண்டே “சில போட்டிகளுக்குப் பிறகா? இதுதான் இந்த சீசனில் எங்கள் மூன்றாவது வெற்றி. வெற்றி பெறுவது எப்போதும் நல்ல உணர்வுதான்” எனக் கூறியுள்ளார்.