1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : வெள்ளி, 7 மார்ச் 2025 (16:38 IST)

அது என்னுடைய இயல்பான கொண்டாட்ட முறை… மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன் -. பாகிஸ்தான் வீரர் அப்ரார்!

நடந்து வரும் சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட போட்டியாக இருந்த இந்தியா பாகிஸ்தான் போட்டி கடந்த மாதம் 27 ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை நடந்து முடிந்தது. இந்த போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வெற்றி பெற்றது.

இந்த   போட்டியில் பாகிஸ்தான் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்தது. இந்திய அணியின் பவுலிங்கை சமாளிக்க முடியாமல் பாகிஸ்தான் அணி 49.4 ஓவர்களில் 241 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அதன் பின்னர் ஆடிய இந்திய அணி விராட் கோலியின் சிறப்பான சதத்தால் எளிதாக 43 ஆவது ஓவரில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் தனது வித்தியாசமானக் கொண்டாட்டத்தின் மூலம் கவனம் ஈர்த்தார் பாகிஸ்தான் வீரர் அப்ரார். இந்திய வீரர் ஷுப்மன் கில்லின் விக்கெட்டை வீழ்த்திவிட்டு அவரை வெளியேறும்படி முகத்தில் கொடுத்த ரியாக்‌ஷன் இணையத்தில் வைரலானது. அவர் அந்த விக்கெட்டை எடுத்த போதே பாகிஸ்தானின் தோல்வி கிட்டத்தட்ட உறுதி ஆகிவிட்டது. ஆனாலும் கில் விக்கெட்டுக்கு அவர் அப்படி ஒரு ரியாக்‌ஷன் கொடுத்தது ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்துள்ளது. இதையடுத்து அவர் சமூகவலைதளங்களில் கேலி செய்யப்பட்டார்.

அதற்கு பதிலளித்துள்ள அப்ரார் அகமது “அது என்னுடைய வழக்கமான கொண்டாட்ட முறை. அதை நான் யாரையும் காயப்படுத்துவதற்காக செய்யவில்லை. ஒருவேளை அதனால் யாராவது மனம்வாடி இருந்திருந்தால், அதற்காக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்” எனக் கூறியுள்ளர்.