அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள்.. விலையை குறைத்தது ஹீரோ நிறுவனம்...
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பிளஸ் 1 பயிலும் மாணவ, மாணவியருக்கு விலையில்லா நவீன மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தின் கீழ், குறைந்த விலையில் சைக்கிள்களை வழங்க 'ஹீரோ சைக்கிள்ஸ்' நிறுவனம் முன்வந்துள்ளது.
தமிழக அரசு சமீபத்தில் தாக்கல் செய்த பட்ஜெட்டில், மாணவர்களுக்குத் தலைக்கவசம் மற்றும் தண்ணீர் பாட்டில் வசதியுடன் கூடிய நவீன மிதிவண்டிகள் வழங்கப்படும் என அறிவித்து, இதற்காக ரூ. 277 கோடி ஒதுக்கீடு செய்திருந்தது.
பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் கோரப்பட்ட ஒப்பந்தப்புள்ளியில், ஹீரோ நிறுவனம் மிகக் குறைந்த விலையைக் கோரி தெரிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி, மாணவர்களுக்கான மிதிவண்டியின் விலை ரூ. 7,235-ல் இருந்து ரூ. 5,260 ஆகவும், மாணவிகளுக்கான மிதிவண்டியின் விலை ரூ. 7,476-ல் இருந்து ரூ. 5,130 ஆகவும் குறைக்கப்பட்டு மொத்தம் 5,32,388 மாணவர்களுக்கு விநியோகம் செய்யப்படவுள்ளது.
புதிய ஒப்பந்தத்தின்படி, சைக்கிள்களில் தமிழ்நாடு அரசின் இலச்சினை லேசர் மூலம் பொறிக்கப்பட்டிருக்க வேண்டும். மேலும், ஐ.எஸ். தரச்சான்று பெற்ற தலைக்கவசம், தண்ணீர் பாட்டில் மற்றும் பராமரிப்புக் கருவிகள் இலவசமாக வழங்கப்படுவதோடு, விநியோகம் செய்யப்பட்ட 30 நாட்களுக்குள் பழுது ஏற்பட்டால் உடனடியாக சரிசெய்து தரவும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

