வீடு கட்ட இனி அரசு அதிகாரி அனுமதி தேவையில்லை! பிரைவேட் இன்ஜினியரே அப்ரூவல் கொடுக்கலாம்!
தமிழ்நாட்டில் வீடு மற்றும் சிறிய வணிகக் கட்டிடங்கள் கட்டுவோருக்கு உதவும் வகையில், தமிழக அரசு புதிய 'மூன்றாம் தரப்பு சான்றிதழ்' திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம், இனி சிறிய கட்டிடங்களுக்கு DTCP அல்லது CMDA அதிகாரிகளிடம் அனுமதி பெற வேண்டிய அவசியமில்லை.
சிங்கிள் விண்டோ இணையதளத்தில் பதிவு செய்துள்ள அங்கீகரிக்கப்பட்ட பொறியாளர்கள் மற்றும் கட்டிடக் கலைஞர்களே நேரடியாகத் திட்ட அனுமதி வழங்கலாம். 750 சதுர மீட்டர் பரப்பளவு மற்றும் 14 மீட்டர் உயரம் வரையிலான குடியிருப்புப் கட்டிடங்கள், 300 சதுர மீட்டர் வரையிலான வணிகக் கட்டிடங்கள் மற்றும் குறிப்பிட்ட தொழிற்கட்டடங்களுக்கு இந்த எளிமைப்படுத்தப்பட்ட முறை பொருந்தும். இருப்பினும், CRZ கடற்கரைப் பகுதிகள், மலைப்பகுதிகள் மற்றும் விவசாய நிலங்கள் போன்ற இடங்களில் இந்தத் திட்டம் செல்லாது.
இணையவழியில் தேவையான ஆவணங்களைப் பதிவேற்றம் செய்து, உரிய கட்டணம் செலுத்தியவுடன் QR குறியீட்டுடன் கூடிய அனுமதி ஆவணத்தை உடனடியாகப் பெற்றுக்கொள்ளலாம். அலுவலகங்களுக்கு அலையத் தேவையில்லை என்பதால் பொதுமக்கள் மற்றும் பில்டர்களுக்கு இது மிகப்பெரிய அவகாசத்தையும் விரைவான சேவையையும் வழங்கும்.
அதேசமயம், தவறான தகவல்களை வழங்கி அனுமதி பெறுவோர் மீது BNS 236 பிரிவின் கீழ் கிரிமினல் வழக்குத் தொடரப்படுவதோடு, சம்மந்தப்பட்ட கட்டிடக் கலைஞர்களின் உரிமம் ரத்து செய்யப்பட்டு கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்படுவார்கள் என வீடமைப்பு மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது.

