ஆப்பிள் மட்டுமல்ல, சாம்சங் நிறுவனத்திற்கும் எச்சரிக்கை விடுத்த டிரம்ப்.. அதிர்ச்சி தகவல்..!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ஐபோன் தயாரிப்பு நிறுவனமான ஆப்பிள் நிறுவனத்திற்கு எச்சரிக்கை விடுத்த நிலையில் தற்போது சாம்சங் நிறுவனத்திற்கும் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
"அமெரிக்காவில் தொழிற்சாலை அமைத்து தயாரிக்கவில்லை என்றால், இங்கு விற்பனை செய்யப்படும் போன் ஒவ்வொன்றுக்கும் 25% இறக்குமதி வரி விதிக்கப்படும்" என டிரம்ப் தெரிவித்தார்.
வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், "இது ஆப்பிளுக்கே மட்டும் இல்லை. சாம்சங் மற்றும் அமெரிக்காவில் விற்பனை செய்யும் எந்த நிறுவனத்துக்கும் இது பொருந்தும்" என வலியுறுத்தினார்.
இதுகுறித்து அவர் தனது சமூக வலைத்தளத்தில் "ஆப்பிள் சிஇஓ டிம் குக்கிடம், அமெரிக்காவில் விற்கப்படும் ஐபோன்கள், இந்தியா அல்லது வேறு நாட்டில் அல்லாமல், அமெரிக்காவிலேயே தயாரிக்கப்பட வேண்டும் என்று ஏற்கனவே சொன்னேன்" என்றார்.
இதையடுத்து, ஆப்பிள் ஷேர் விலை 2.6% வீழ்ந்தது. இதனால் நிறுவனம் ₹70 பில்லியன் சந்தை மதிப்பீட்டை இழந்துள்ளது.
தற்போது ஆப்பிள், சீனாவில் இருந்து இந்தியாவுக்கு ஐபோன் உற்பத்தியை மாற்றி வருகிறது. சமீப அறிக்கையின்படி, அமெரிக்காவில் விற்கப்படும் பல ஐபோன்கள் இனி இந்தியாவில் தயாரிக்கப்பட்டவை ஆக இருக்கும்.
சாம்சங், 2019ல் சீனாவிலுள்ள தனது கடைசி தொழிற்சாலையை மூடியுள்ளது. தற்போது இந்தியா, தென் கொரியா, வியட்நாம் மற்றும் பிரேசிலில் உற்பத்தி செய்கிறது.
ஆனால் டிரம்ப் கூறுகையில், “அமெரிக்காவில்தான் உற்பத்தி செய்தால்தான் வரிவிலக்கு கிடைக்கும்” என தெரிவித்துள்ளார். இதனால் சாம்சங் உள்பட ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்கள் அதிர்ச்சி அடைந்துள்ளன.
Edited by Siva