அடுத்தடுத்து பல அதிரடி அறிவிப்புகளை போட்டு அமெரிக்க மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி வரும் அதிபர் ட்ரம்ப், ஹாலிவுட்டையும் விட்டுவைக்கவில்லை.
அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற டொனால்டு ட்ரம்ப் சமீபத்தில் அமல்படுத்திய பரஸ்பர வரிவிதிப்பு கொள்கையால், வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் பலவற்றின் விலை உயர்ந்துள்ளது. இந்நிலையில் அடுத்தடுத்த அறிவிப்புகளால் தொடர் அதிர்ச்சிகளை கிளப்பி வருகிறார் ட்ரம்ப்.
இந்த முறை அதிர்ச்சி ஹாலிவுட் படங்களுக்கு..! ஹாலிவுட் படங்களுக்கு உலகளாவிய அளவில் வரவேற்பு உள்ள நிலையில், அதை கவனத்தில் கொண்டு ஹாலிவுட் படங்கள் பலவற்றின் படப்பிடிப்பு பணிகள் ஆசிய நாடுகள், ஐரோப்பிய நாடுகளிலும் நடந்து வருகின்றன. மேலும் தொழில்நுட்ப பணிகள், ஷூட்டிங் செலவு போன்றவை அமெரிக்காவை விட பிற நாடுகளில் குறைவாக இருப்பதால் பல ஹாலிவுட் ஸ்டுடியோக்கள் வெளிநாடுகளில் படப்பிடிப்பு நடத்த விரும்புகின்றன.
இதனால் ஹாலிவுட்டை நம்பி உள்ள சொந்த நாட்டு திரைப்பட தொழில்நுட்ப கலைஞர்கள் பாதிக்கப்படுவதாக கூறியுள்ள ட்ரம்ப், வெளிநாடுகளில் ஷூட்டிங் செய்யப்படும் ஹாலிவுட் படங்களுக்கு இனி 100 சதவீதம் வரி விதிக்கப்படும் என அதிர்ச்சி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இதுபற்றி அவர் பேசியபோது, இந்த வரிவிதிப்பால் ஹாலிவுட் சினிமா பணியாளர்கள் காப்பாற்றப்படுவதுடன், அரசின் வருவாயும் அதிகரிக்கும் என கூறியுள்ளார். ஆனால் ட்ரம்ப்பின் இந்த அறிவிப்புக்கு ஹாலிவுட் ஸ்டுடியோக்கள் இடையே எதிர்ப்புகள் கிளம்பத் தொடங்கியுள்ளது.
Edit by Prasanth.K