யமுனை நதியில் செத்து மிதக்கும் மீன்கள்.. இதுதான் சுத்தம் செய்யும் லட்சணமா? ஆம் ஆத்மி கேள்வி...
டெல்லியில் சத் பூஜை கொண்டாட்டங்களுக்கு மத்தியில், யமுனை நதியின் மாசுபாடு மற்றும் இறந்த மீன்கள் மிதக்கும் விவகாரம் தொடர்பாக பாஜக மற்றும் ஆம் ஆத்மி கட்சி இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.
யமுனை நதியை சுத்தம் செய்வதாக கூறி ரேகா குப்தா தலைமையிலான பாஜக அரசு கோடிக்கணக்கில் மக்கள் வரிப்பணத்தை விளம்பரத்திற்காக வீணடித்துள்ளதாக ஆம் ஆத்மி கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
டெல்லி ஆம் ஆத்மி தலைவர் சௌரப் பரத்வாஜ் வெளியிட்டுள்ள வீடியோவில், யமுனை நதியில் நச்சு நுரை சூழ்ந்திருக்க, பக்தர்கள் அடிப்படை வசதிகளோ, போதிய வெளிச்சமோ இன்றி இருளில் சிரமத்துடன் வழிபாடு நடத்துவது பதிவாகியுள்ளது. மேலும், நதியில் ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து மிதப்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதற்கு பதிலடி கொடுத்துள்ள டெல்லி பாஜக, யமுனை நதி முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு தூய்மையாக இருப்பதாகவும், அரசின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்க ஆம் ஆத்மி கட்சியினரே திட்டமிட்டு இறந்த மீன்களை நதியில் கொட்டி வீடியோ எடுத்து பரப்புவதாகவும் பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளது.
சத் பூஜையை அரசியலாக்க வேண்டாம் என எச்சரித்துள்ள பாஜக, இது குறித்து காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளது.

