சிவகார்த்திகேயன் பற்றி எழுந்த ட்ரோல்கள்… லப்பர் பந்து இயக்குனரின் ஆதரவுப் பதிவு!
சமீபகாலமாக சிவகார்த்திகேயன் பற்றி இணையத்தில் சில ட்ரோல் பதிவுகள் அதிகளவில் பகிரப்பட்டு வந்தன. அதற்குக் காரணம் சமீபகாலமாக சிவகார்த்திகேயன் திரையுலகினர் சிலரை அழைத்து அவர்களின் படங்களுக்காகப் பாராட்டி வந்தார் என்பதுதான். தொடர்ச்சியாக இதுபோன்ற புகைப்படங்கள் வெளியாகின.
அதை ட்ரோல் செய்யும் விதமாக சிவகார்த்திகேயன் ரஜினிகாந்தை அழைத்துப் பாராட்டினார், கமல்ஹாசனின் தக் லைஃப் படத்தின் டீசரைப் பார்த்து அவரை அழைத்து பாராட்டினார், மிஷன் இம்பாசிபிள் படத்துக்காக டாம் க்ரூஸை அழைத்துப் பாராட்டினார் என்றெல்லாம் மீம்களை உருவாக்கி நெட்டிசன்கள் குறும்பைக் காட்டினர்.
இந்நிலையில் இந்த கேலி பதிவுகளுக்குப் பதிலளிக்கும் விதமாக லப்பர் பந்து படத்தின் இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து ஒரு பதிவைப் பகிர்ந்துள்ளார். அதில் “எங்களை மாதிரி ஒரு இளம் இயக்குனர் படம் வரும் போது அதை துறையில் உள்ள ஒரு பெரிய நட்சத்திரம் பார்த்து பாராட்டுவது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான விஷயம். சிவகார்த்திகேயன் சார் உங்களுக்கு நன்றி. நாங்கள் படம் பார்க்க அழைத்த போது வந்து பார்த்து நீங்கள் அதைப் பற்றி பேசியது எங்கள் படத்துக்கும் எங்களுக்கு மிகப்பெரிய அளவில் உதவியது. மீண்டும் ஒருமுறை நன்றி. எனக்காக மட்டும் இல்லை. என்னைப் போன்ற அறிமுக இயக்குனர்களுக்காக.” எனக் கூறியுள்ளார்.