ஆகஸ்ட் 29 ஆம் தேதி நாங்க கல்யாணம் பண்ணிக்கப் போறோம்… மேடையில் அறிவித்த விஷால் & தன்ஷிகா!
சமீபகாலமாக நடிகர் விஷாலின் திரைவாழ்க்கையை அதிகளவில் பின்னடைவை சந்தித்து வருகிறது. அவர் நடிப்பில் சமீபத்தில் மார்க் ஆண்டனி மற்றும் மத கஜ ராஜா ஆகிய படங்கள் மட்டுமே வெற்றி பெற்றன. அதே போல அவர் உடல்நிலைக் குறித்தும் பொதுவெளியில் பல சர்ச்சைகள் எழுந்தன. இதற்கிடையில் அவர் நடிப்பில் உருவாகி 12 ஆண்டுகளாக ரிலீஸாகாமல் முடங்கிய மத கஜ ராஜா திரைப்படம் வெளியாகி சூப்பர் ஹிட் ஆனது அவருக்கு மகிழ்ச்சியான செய்தியாக அமைந்தது.
அடுத்த நல்ல செய்தியாக சமீபத்தில் விஷால் தனது திருமணத்துக்குப் பெண்பார்த்துவிட்டதாகவும், இன்னும் நான்கு மாதத்தில் திருமணம் என்றும் அறிவித்திருந்தார். இதற்கிடையில் விஷால் தமிழில் பிரபல நடிகையாக இருக்கும் சாய் தன்ஷிகாவைதான் திருமணம் செய்துகொள்ள உள்ளார் என்று தகவல் பரவி வந்தது.
அதை நேற்று தன்ஷிகா நடித்த யோகிடா படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விஷாலும் சாய் தன்ஷிகாவும் பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் உறுதிபடுத்தினர். இதுபற்றி பேசிய தன்ஷிகா “விஷால் எனக்கு 15 ஆண்டுகளாக நண்பர். எனக்காக அவர் பல சமயங்களில் குரல் கொடுத்துள்ளார். சமீபத்தில்தான் நான் எங்கள் நட்பு திருமணத்தை நோக்கி செல்வதை உணர்ந்தோம், இது சம்மந்தமாக இருவரும் பேசினோம். வரும் ஆகஸ்ட் 29 ஆம் தேதி நாங்கள் திருமணம் செய்துகொள்ள உள்ளோம் எனக் கூறியுள்ளார்.