அவர்களை கமல் & த்ரிஷாவாகப் பார்க்காதீர்கள்… சர்ச்சைக் காட்சிகள் குறித்து மணிரத்னம் விளக்கம்!
பல ஆண்டுகளுக்குப் பிறகு பொன்னியின் செல்வன் திரைப்படம் மூலமாக ஒரு கமர்ஷியல் வெற்றியை ருசித்தார் மணிரத்னம். அதன் பிறகு இப்போது அவர் கமல்ஹாசன் நடிப்பில் தக் லைஃப் படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த படத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு, திரிஷா, ஜோஜு ஜார்ஜ், கௌதம் கார்த்திக், அசோக் செல்வன் மற்றும் ஐஸ்வர்யா லஷ்மி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார்.
கமல்ஹாசன், உதயநிதி ஸ்டாலின் மற்றும் மணிரத்னம் ஆகிய மூவரும் இணைந்து தயாரிக்கின்றனர். படம் ஜூன் 5 ஆம் தேதி ரிலீஸாகும் நிலையில் தற்போது விறுவிறுப்பாக ப்ரமோஷன் நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் படத்தின் டிரைலரில் இடம்பெற்றிருந்த சில சர்ச்சையானக் காட்சிகள் குறித்து மணிரத்னம் விளக்கம் அளித்துள்ளார்.
டிரைலரில் கமல்ஹாசனுக்கு அபிராமி மற்றும் த்ரிஷா ஆகிய நடிகர்களோடு நெருக்கமானக் காட்சிகள் இருந்தன. கமலுக்கு அவர்களுக்கும் இடையே 30 வயது வித்தியாசம் இருக்கும் போது, இப்படிப்பட்ட காட்சிகள் வைக்கலாமா என கேள்விகள் எழுந்தன. அது குறித்து மணிரத்னம் ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது “அவர்களை கமல், த்ரிஷா மற்றும் அபிராமி எனப் பார்க்காமல் தக் லைஃப் படத்தின் கதாபாத்திரங்களாகப் பாருங்கள். அவர்கள் கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். படத்தைப் பார்க்காமல் எதையும் முடிவு செய்யாதீர்கள் எனக் கூறியுள்ளார்.