‘கமல் சார் 58 நிமிடம் பேசுவார்.. நான் 2 நிமிடம் பேசுவேன்’ – நக்கல்யா மணிரத்னத்துக்கு!
இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக உள்ளது கமல்ஹாசன் – மணிரத்னம் கூட்டணியின் தக் லைஃப் படம். 1987 ஆம் ஆண்டு வெளியான நாயகன் என்ற கல்ட் கிளாசிக் படத்தைக் கொடுத்த கமல்ஹாசன் –மணிரத்னம் கூட்டணி 35 ஆண்டுகளுக்குப் பிறகு தக் லைஃப் படத்தில் மீண்டும் இணைந்துள்ளது. இந்த படத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு, திரிஷா, ஜோஜு ஜார்ஜ், கௌதம் கார்த்திக், அசோக் செல்வன் மற்றும் ஐஸ்வர்யா லஷ்மி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார்.
கமல்ஹாசன், உதயநிதி ஸ்டாலின் மற்றும் மணிரத்னம் ஆகிய மூவரும் இணைந்து தயாரித்துள்ளனர். படம் ஜூன் மாதம் 5 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது. இதற்கிடையில் படத்தின் டிரைலர் ரிலீஸாகி கவனம் பெற்றுள்ளது. தற்போது படத்தின் ப்ரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.
இந்நிலையில் ஒரு நேர்காணலில் கலந்துகொண்ட இயக்குனர் மணிரத்னத்திடம் தொகுப்பாளர் கோபிநாத் “உங்களையும் கமல்ஹாசனையும் ஒரு மணிநேரம் தனியாக உட்காரவைத்து சினிமாவைத் தவிர என்ன வேண்டுமானாலும் பேசலாம் என்றால், என்ன பேசுவீர்கள்?” எனக் கேட்டார். அதற்கு மணிரத்னம் “அந்த ஒரு மணிநேரத்தில் 58 நிமிடம் கமல் சார் எதைப் பற்றி வேண்டுமானாலும் பேசுவார். நான் 2 நிமிடம் பேசுவேன். அதுவும் சூப்பர் சார் என்று சொல்ல மட்டும்தான்” எனக் கூறியுள்ளார். மணிரத்னத்தின் இந்த நக்கலான பதில் இணையத்தில் பரவி ரசிகர்களிடம் கலகலப்பை ஏற்படுத்தியுள்ளது.