டியூட் படத்தில் இருந்து ‘கருத்த மச்சான்’ பாடலை நீக்கவேண்டும்… சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!
ப்ரதீப், மமிதா பைஜு மற்றும் சரத்குமார் உள்ளிட்டோர் நடிப்பில் டியூட் திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 17 ஆம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கில் ரிலீஸானது. இந்த படத்துக்கு சாய் அப்யங்கர் இசையமைக்க, மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. கீர்த்தீஸ்வரன் என்ற அறிமுக இயக்குனர் இயக்கியுள்ளார்.
ரிலீஸுக்கு முன்பே இந்த படத்துக்கு மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு நிலவியது. அந்த எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்ததால் மிகப்பெரிய அளவில் வசூல் வேட்டை நிகழ்த்தி வருகிறது. ஆறு நாளில் 100 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தின் பட்ஜெட் சுமார் 35 கோடி ரூபாய் என்றும் போட்டதை விட இரு மடங்கு இலாபத்தை இந்த படம் கொடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்த படத்தில் இளையராஜாவின் ஹிட் பாடலான கருத்த மச்சான் பாடலின் ரீமிக்ஸ் வெர்ஷன் ஒரு முக்கியமானக் காட்சியில் பயன்படுத்தப்பட்டது. அந்த காட்சித் திரையரங்கில் பெரும் ஆதரவைப் பெற்றது. இந்நிலையில் அந்த பாடலைப் பயன்படுத்த தன்னிடம் அனுமதிப் பெறவில்லை எனக் கூறி இளையராஜா தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. அந்த வழக்கு விசாரணையின் இறுதுயில் “ட்யூட் படத்தில் அந்த பாடலை 7 நாட்களுக்குள் நீக்கவேண்டும் என உத்தரவுப் பிறப்பித்துள்ளது. முன்னதாக குட் பேட் அக்லி படத்தில் இடம்பெற்ற இளையராஜாவின் பாடல்களும் இதுபோல நீக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.