"எங்களுக்குத் தரப்பட்ட இடத்தில் நாங்கள் பேசினோம், எங்கள் மீது தவறு இல்லை": கரூர் சம்பவம் குறித்து விஜய் வெளியிட்ட வீடியோ
கரூரில் நடந்த துயர சம்பவம் குறித்து வீடியோ வெளியிட்ட விஜய், அதில் கூறியிருப்பதாவது:
வணக்கம். என் வாழ்க்கையில் இப்படிப்பட்ட ஒரு வலி மிகுந்த சூழ்நிலையை நான் சந்தித்ததே இல்லை. என் மனம் முழுக்க வலி மட்டும்தான். இந்தச் சுற்றுப்பயணத்தில் இவ்வளவு மக்கள் பார்க்க வருவதற்குக் காரணம், அவர்கள் என் மீது வைத்திருக்கும் அன்பு. அந்த அன்புக்கும் பாசத்திற்கும் நான் எப்போதும் கடமைப்பட்டவன். அதனால்தான், மற்ற எல்லாவற்றையும் விட மக்களின் பாதுகாப்புதான் எனக்கு முக்கியம் என்று உறுதியாக இருந்தேன். அதனால்தான் அரசியல் காரணங்களைத் தவிர்த்து, மக்களின் பாதுகாப்பிற்காகப் பிரசார இடங்களை மிகவும் கவனமாகத் தேர்ந்தெடுத்தோம், காவல்துறைக்கும் கோரிக்கை வைத்தோம்.
ஆனால், நடக்கக்கூடாதது நடந்துவிட்டது. நான் ஒரு மனிதன்தானே? அத்தனை பேர் பாதிக்கப்பட்டு இருக்கும்போது என்னால் அந்த இடத்தை விட்டு எப்படி வர முடியும்? நான் அங்கிருந்து சென்றால், வேறு சில அசம்பாவிதங்கள் நடந்துவிடலாம் என்றுதான் அங்கேயே இருந்தேன். இந்த நேரத்தில் தங்கள் சொந்தங்களை இழந்த குடும்பங்களுக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். என்ன சொன்னாலும் இந்த வலியை ஈடு செய்ய முடியாது என்பது எனக்குத் தெரியும். மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்கள் விரைவில் குணமடைய வேண்டிக்கொள்கிறேன். சீக்கிரமே உங்கள் அனைவரையும் சந்திக்கிறேன்.
இந்த நேரத்தில் எங்கள் வலியைப் புரிந்துகொண்டு, எங்களுக்காகப் பேசிய அனைத்து அரசியல் தலைவர்களுக்கும், நண்பர்களுக்கும் என்னுடைய நன்றிகள். நாங்கள் ஐந்து மாவட்டங்களில் பிரசாரம் செய்தோம். எதுவும் நடக்கவில்லை. ஆனால், கரூரில் மட்டும் எப்படி இப்படி நடந்தது? மக்களுக்கு எல்லா உண்மையும் தெரியும். கரூர் மக்கள் அந்த உண்மையை வெளியே சொல்லும்போது, கடவுளே நேரில் வந்து சொல்வதுபோல் உணர்ந்தேன். விரைவில் அனைத்து உண்மைகளும் வெளிவரும்.
எங்களுக்கு வழங்கப்பட்ட இடத்தில்தான் நாங்கள் பிரசாரம் செய்தோம். இந்தச் சம்பவத்தில் எங்கள் தரப்பில் எந்தத் தவறும் இல்லை. ஆனால், எங்கள் கட்சி நிர்வாகிகள், நண்பர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. சமூக ஊடகங்களில் எங்கள் நண்பர்கள் மீதும் வழக்குகள் போடப்பட்டுள்ளன.
முதல்வர் அவர்களே, உங்களுக்கு ஏதாவது பழிவாங்க வேண்டும், ஏதாவது பிரச்சினை செய்ய வேண்டும் என்றால், என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள். அவர்கள் எனக்குத் தேவை. நான் என் வீட்டில் அல்லது என் அலுவலகத்தில் இருப்பேன். என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள்.
நண்பர்களே, நம்முடைய அரசியல் பயணம் இன்னும் வலிமையாகவும், இன்னும் பெரியதாகவும் தொடரும்.
Edited by Siva